ரிஷப் பண்ட்டை அனைத்து விதமான போட்டிகளுக்குமான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி வலியுறுத்தியுள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமான இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் ஒரு சதம், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் ஒரு சதம், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருமுறை 90 ரன்களுக்கு மேல் அடித்தது என தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். 

ரிஷப்பின் விக்கெட் கீப்பிங்கில் சில குறைபாடுகள் இருந்தாலும் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். இளம் வீரரான அவர், பயம் என்பதே என்னவென்று தெரியாமல் அடித்து ஆடுகிறார். பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுகிறார். தோனிக்கு அடுத்து அவரை அனைத்து விதமான இந்திய அணிக்கும் நிரந்தர விக்கெட் கீப்பராக்கும் விதமாக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் அணியிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்ற ரிஷப், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டார். 

இதற்கிடையே, சிட்னியில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி 159 ரன்களை குவித்தார் ரிஷப் பண்ட். இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, ரிஷப் பண்ட் மிகச்சிறந்த வீரர். அவரை அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடவைக்க வேண்டும் என்பதை தேர்வாளர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ரிஷப் பண்ட் உலக கோப்பையில் மேட்ச் வின்னராக திகழ்வார். ரிஷப் பண்ட்டை ஒருநாள் போட்டிகளில் நான்காம் வரிசையில் இறக்கலாம். அவர் வேகப்பந்து வீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு அடித்து ஆடுகிறார். அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசுகிறார். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுத்த ரிஷப் பண்ட், சிட்னி டெஸ்டில் மிகவும் கட்டுப்பாட்டுடன் அருமையாக ஆடினார். அவர் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த சொத்து. அவர் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் மேம்பட வேண்டும். போகப்போக விக்கெட் கீப்பிங்கில் மேம்பட்டு விடுவார். அவர் இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்திய அணிக்காக ஆடுவார். அவரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் ரிஷப்பை சேர்க்க வேண்டும். 

ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர்கள் அணியில் கண்டிப்பாக தேவை. ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள். அவர்களுக்கு அடுத்து ரிஷப் பண்ட் தான் அதை செய்யக்கூடியவர். தோனி, ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அவரவர் ஆட்டத்தை ஆடுவர். ஆனால் ரிஷப் பண்ட், வெறும் 5 ஓவர்களில் ஆட்டத்தையே புரட்டிப்போடும் திறன்பெற்றவர் என கங்குலி புகழ்ந்துள்ளார்.