ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் முதல் இரண்டு போட்டிகளிலிருந்து பிரித்வி ஷா நீக்கப்பட்டார். 

அதனால் முரளி விஜயும் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி காயமடையவில்லை எனில், முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே ஆடும் லெவனில் இடம் பெற்றிருப்பர். பிரித்வியுடன் தொடக்க வீரராக களமிறங்கப்போவது யார் என்ற விவாதம் நடந்துவந்த நிலையில், பிரித்வியின் காயத்தால் இருவருமே வாய்ப்பை பெற்றனர்.

ஆனால் அதை பயன்படுத்திக்கொள்ள இருவருமே தவறிவிட்டனர். முதல் போட்டியில் சொதப்பியதுடன் பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது போட்டியிலும் படுமோசமாக சொதப்பினர். கேஎல் ராகுல் தொடர்ச்சியாக சொதப்பினாலும், டெஸ்ட் அணியின் எதிர்காலத்தை மனதில்கொண்டு அவருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் 35 வயதான முரளி விஜய், இங்கிலாந்தில் முதல் இரண்டு போட்டிகளில் சோபிக்காததால், தொடரிலிருந்து பாதியில் நீக்கப்பட்டார். பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து பாதியில் நீக்கப்பட்ட முரளி விஜய், கவுண்டி போட்டியில் சதமடித்தார். அதனாலும் அவரது அனுபவத்திற்காகவும் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்த முரளி விஜய், முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பினார். இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் டக் அவுட்டாகி வெளியேறினார். 

ராகுலும் தொடர்ந்து சொதப்பித்தான் வருகிறார். ஆனால் அவர் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்களை அதிரடியாக ஆடி குவித்தார். முரளி விஜய் - ராகுல் இருவருமே சொதப்பிவருவதால் இந்திய அணியின் வெற்றி பாதிக்கப்படுகிறது.

பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது போட்டியில் முரளி விஜய் டக் அவுட்டாகினார். ராகுல் 2 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில், இவர்களின் பேட்டிங்கால் கடும் அதிருப்தியடைந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, இருவரையும் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கங்குலி, ஒரு தொடக்க வீரராக முரளி விஜய் இந்தியாவிற்கு வெளியே இப்படி ஆடக்கூடாது. அவருடைய ஷாட் செலக்‌ஷனே தவறு. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை அவர் ஆடியுள்ள மூன்று இன்னிங்ஸ்களிலுமே டிரைவ் ஆட முயற்சித்துத்தான் அவுட்டாகியுள்ளார். புது பந்தில் தடுப்பாட்டம் தான் ஆட வேண்டும். அதைவிடுத்து டிரைவ் ஆட முயற்சித்து விக்கெட்டை பறிகொடுக்கிறார். இங்கிலாந்திலும் சரியாக ஆடாமல் தொடரின் பாதியில் நீக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவிலும் சொதப்பிவருகிறார். எனவே இனிமேல் முரளி விஜய் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தார். 

ராகுல் குறித்து பேசிய கங்குலி, புதிய பந்தில் எப்படி ஆட வேண்டும் என்று கோலியிடமிருந்து ராகுல் கற்றுக்கொள்ள வேண்டும். தொடக்க வீரராகி விட்டால், அதற்கேற்றாற்போல கண்டிப்பாக ஆடியாக வேண்டும். புதிய பந்தில் தடுப்பாட்டம் ஆட வேண்டும் என்று ராகுலுக்கு கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.