தோனியுடனான நெகிழ்ச்சியான தருணங்களையும் தோனியின் திறமை குறித்தும் முன்னாள் கேப்டன் கங்குலி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் கேப்டன்கள் கங்குலி, தோனி ஆகியோர் இந்திய அணியை கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி தற்போது கோலி தலைமையிலான இந்திய அணி, சர்வதேச அளவில் சிறந்த அணியாக திகழ்கிறது. இந்திய அணியின் வளர்ச்சியில் கேப்டனாக கங்குலியின் பங்களிப்பு அளப்பரியது. அணி வீரர்களின் அணுகுமுறையை மாற்றி அனைவரையும் ஒருங்கிணைத்து 2003ம் ஆண்டு உலக கோப்பையின் இறுதி போட்டிவரை அழைத்து சென்றார். கங்குலியின் கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.

ஆனால் 2003 உலக கோப்பையை வெல்ல முடியாமல் போனது, பெரும் ஏமாற்றம்தான். அந்த உலக கோப்பையை இழந்தது தொடர்பாகவும் தோனி குறித்தும் தனது சுயசரிதையில் கங்குலி நெகிழ்ந்து எழுதியுள்ளார்.

அதில், ஒவ்வொரு போட்டியிலும் நெருக்கடியான நிலைகளை வீரர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை உற்று கவனிப்பேன். ஒரு கேப்டனாக அதை செய்ய வேண்டியது எனது கடமையும் கூட. எனக்கு தோனியை 2004ம் ஆண்டு அவர் அணியில் இடம்பெறும்போது தான் தெரியும். அதற்கு முன் தெரியாது. நாளுக்கு நாள் அவரது திறமை மேம்பட்டது. அதை பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். தோனியின் விளையாட்டும் எனக்கு மிகவும் பிடித்தது. 

2003 உலக கோப்பை இறுதி போட்டியில், உலகின் சிறந்த அணியாக திகழ்ந்த இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப்போனது. ஆனால், 2003 உலக கோப்பையில் தோனி, அணியில் இடம்பெற்றிருந்தால் போட்டியின் முடிவு கண்டிப்பாக மாறியிருக்கும். இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியிருக்கும். என்னைப் பொறுத்தவரை 2003ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியல் தோனி இடம் பெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று விரும்பினேன். ஆனால், அந்த நேரத்தில் இந்தியன் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியாற்றிக் கொண்டு இருந்தார் என கங்குலி தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து மேலும் நெகிழ்ச்சியுடன் எழுதியுள்ள கங்குலி, நான் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியின் போது என்னை அணிக்கு தலைமை ஏற்குமாறு தோனி கேட்டுக்கொண்டார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். 2வது முறையாக தோனி என்னிடம் கேட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. தோனியின் வேண்டுகோளை ஏற்று 3 ஓவர்கள் மட்டுமே கேப்டன் பொறுப்பை ஏற்று செயல்பட்டேன். ஆனால், என்னால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. அதன்பின் தோனியை அழைத்து கேப்டன் பொறுப்பு உங்களுடையது; உங்கள் பணி. நீங்கள்தான் கவனிக்க வேண்டும் என்று கூறிவிட்டேன். இதைக் கேட்டு தோனி கடைசியாக புன்னகையை மட்டும் பதிலாக அளித்தார் என கங்குலி தோனியுடனான உறவு குறித்து நெகிழ்ச்சியுடன் சுயசரிதையில் பகிர்ந்துள்ளார்.