தோனி குறித்து முன்னாள் கேப்டன் கங்குலியிடம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப் கேட்டதற்கு கங்குலி அவரிடமே கிண்டலடித்துள்ளார். 

கங்குலி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது கடந்த் 2004ம் ஆண்டு தோனி அணியில் அறிமுகமானார். அறிமுகமான புதிதில் தோனி சரியாக ஆடாவிட்டாலும் அவரது திறமை மீது நம்பிக்கை வைத்த கங்குலி, தோனிக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். தோனியும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறப்பாக ஆடி இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்து கேப்டனாக ஆகுமளவிற்கு உயர்ந்தார்.

தோனி அணிக்கு வந்த புதிதில் நீளமான தலைமுடி, ஆக்ரோஷமான பேட்டிங் என தோற்றத்திலும் ஆட்டத்திலும் மிரட்டினார். 2006ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்று ஆடியது. அந்த தொடரில் தோனியின் தோற்றம் மற்றும் அதிரடியான பேட்டிங்கை பார்த்து வியந்துபோன அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷரஃப், கங்குலியிடம் தோனி குறித்து விசாரித்துள்ளார். 

அந்த சம்பவத்தை அண்மையில் கங்குலி பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய கங்குலி, தோனி குறித்து முஷரஃப் என்னிடம் பேசிய விஷயம் இன்னும் ஞாபமிருக்கிறது. தோனியின் நீளமான தலைமுடியை கொண்ட தோற்றம், அதிரடியான பேட்டிங் ஆகியவற்றை பார்த்து வியந்துபோன முஷரஃப், இந்த ஆளை எங்கே பிடித்தீர்கள் என என்னிடம் கேட்டார். அதற்கு நான், வாகா எல்லையில்(இந்தியா - பாகிஸ்தான் எல்லை) நடந்துகொண்டிருந்தார். அங்கிருந்துதான் நாங்கள் அவரை கூட்டிவந்தோம் என்று கிண்டலாக கூறினேன் என்று கங்குலி அந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். 

பாகிஸ்தானின் அதிபர் என்றும் பாராமல் கிண்டலாக அவர் கேட்ட கேள்விக்கு கிண்டலாகவே பதிலளித்துள்ளார் கங்குலி. அதனால்தான் அவர் தாதா.