தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆடிய டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மாவிற்கு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து தொடரில் ராகுல், தவான், முரளி விஜய் ஆகியோர் சொதப்பியதை அடுத்து மீண்டும் ரோஹித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே ரோஹித் ஆட விருப்பம் தெரிவித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ராகுலும் தவானும் சரியாக ஆடாததால், டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித்தை தொடக்க வீரராக முயற்சிக்கலாம் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் ரோஹித்துக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்படாததால், அதிருப்தியடைந்த ரசிகர்கள், ரோஹித் சர்மா வேண்டுமென்றே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார் என்று குற்றம்சாட்டினர். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டதற்கு கங்குலியும் அதிருப்தி தெரிவித்திருந்தார். அப்போது, கங்குலி பதிவிட்டிருந்த டுவீட்டில், நீங்கள் விதிவிலக்கானவர் ரோஹித். ஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் டெஸ்ட் அணியில் இடம்பெறாதது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் நீங்கள் டெஸ்ட் அணியில் இடம்பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என ரோஹித்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். 

கங்குலி சொன்னதை போலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்; மேலும் பந்து நன்றாக பவுன்சாகும் என்பதால், அந்த சூழலில் ரோஹித் சர்மா அசத்துவார் என்ற காரணத்தால் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

ரோஹித் டெஸ்ட் அணியில் இடம்பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று கங்குலி கூறியிருந்த நிலையில், அவர் கூறியதை போலவே ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் வெகுவிரைவாகவே சேர்க்கப்பட்டுவிட்டார்.