முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நேற்று காலமானார். நாட்டின் சிறந்த பிரதமர்களில் ஒருவரான வாஜ்பாய், எதிர்க்கட்சியினராலும்கூட விரும்பப்பட்டவர். பன்முகத்திறமை கொண்ட வாஜ்பாய், சிறந்த விளையாட்டு ரசிகரும் கூட. 

2004ல் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடந்தது. கங்குலி தலைமையிலான இந்திய அணி 2003 உலக கோப்பை இறுதி போட்டி வரை சென்று வலுவாக திகழ்ந்த சமயம் அது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆட அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஏற்பாடு செய்தார். 

அந்த தொடரில் ஆடுவதற்கு பாகிஸ்தான் செல்வதற்கு முன்னதாக கங்குலி தலைமையிலான இந்திய அணி, வாஜ்பாயை சந்தித்தது. அப்போது இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட பேட்டை வாஜ்பாய்க்கு பரிசளித்தனர். அதேபோல வாஜ்பாயும் ஒரு பேட்டை வீரர்களுக்கு பரிசளித்தார். அதில், தொடரை மட்டுமல்ல; இதயங்களையும் வென்று வாருங்கள் என எழுதி பரிசளித்தார். 

இதையடுத்து பாகிஸ்தானுக்கு சென்று ஆடிய இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-2 எனவும், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனவும் வென்று அசத்தியது. வாஜ்பாய் வாழ்த்தியதற்கு ஏற்றவாறு பாகிஸ்தான் தொடரை வென்று இந்தியா திரும்பியது கங்குலி தலைமையிலான இந்திய அணி.