வெற்றிக்கு அருகில் நெருங்கிவிட்டால், வெற்றியை பறிக்கும் வித்தையை கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது. முதல் போட்டியில் வெற்றியின் விளிம்புவரை வந்த இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மூன்றாவது போட்டியில் வென்ற இந்திய அணி, நான்காவது போட்டியிலும் போராடி தோல்வியடைந்தது. வெற்றியின் விளிம்புவரை சென்று, இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வியை தழுவியது. 

நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கோலி அவுட்டாகி அடுத்த 60 ரன்களுக்குள் இந்திய அணி ஆல் அவுட்டானது. ஒவ்வொரு தோல்விக்கு பிறகும், எதிரணிக்கு சவால் விடுக்கும் வகையில் ஆடினோம். வெற்றியின் விளிம்புவரை சென்று தோற்றுவிட்டோம். எனினும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தைத்தான் ஆடினோம் என்று கேப்டன் கோலி தெரிவிக்கிறார். அவர் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அதே கருத்தைத்தான் தெரிவிக்கிறார். 

இந்நிலையில், இவர்களின் கருத்துக்கு கங்குலி அதிரடி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள கங்குலி, நன்றாக ஆடினோம் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இந்தியாவிற்கு வெளியே ஆடியுள்ள கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் 5ல் தோல்வியடைந்துள்ளோம். சவுத்தாம்ப்டன் டெஸ்டில் போராடி தோல்வியடைந்தோம். கோலி அவுட்டானபிறகே, இந்திய அணி தோல்வியை நோக்கி செல்வதாக வர்ணனையாளர்கள் குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

நன்றாகத்தான் ஆடினோம் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டே இருக்க முடியாது. வெற்றிக்கு அருகே நெருங்கிவிட்டால், வெற்றியை பறிக்கும் வித்தையை கற்றுக்கொள்ள வேண்டும். நமக்கு திறமை இருப்பதால்தான் வெற்றிக்கு அருகில் செல்ல முடிகிறது. ஆனால் வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டால் வெற்றி பெற வேண்டும். நெருக்கடியான சூழல்களை சமாளித்து ஆட கற்றுக்கொள்ள வேண்டும் என கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.