ரோஹித் சர்மா டி20 போட்டியிலும் இரட்டை சதம் அடிப்பார் என முன்னாள் கேப்டன் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே சாத்தியப்பட்ட இரட்டை சதத்தை ஒருநாள் கிரிக்கெட்டிலும் சாத்தியப்படுத்தி காட்டியவர் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். சச்சின் டெண்டுல்கர் தொடங்கி வைத்தார். அவரை பின் தொடர்ந்து சேவாக்கும் இரட்டை சதம் அடித்தார்.

சேவாக்கைத் தொடர்ந்து ஹிட்மேன் ரோஹித் சர்மா, ஒரு முறை இரு முறை அல்ல; மூன்று முறை இரட்டை சதம் அடித்து அசத்தினார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை ரோஹித் விளாசினார். அதுதான் முதல் இரட்டை சதமாக இருந்தாலும் 2014ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய ரோஹித், 264 ரன்கள் குவித்து மிரட்டினார். ரோஹித்தின் அந்த ஆட்டம் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்க கூடியது. சர்வதேச அளவிலான அனைத்து அணிகளும் ரோஹித்தைக் கண்டு மிரண்டன.

இதையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் போட்டியில் மூன்றுமுறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு ரோஹித்தான் சொந்தக்காரர்.

கடந்த ஆண்டின் இறுதியில் அதே சுற்றுப்பயணத்தின் டி20 தொடரின் இரண்டாவது போட்டியில், சதமடித்த ரோஹித், இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து அவுட்டானார். 20 ஓவர் போட்டியின் 13வது ஓவரிலேயே சதத்தை எட்டிய ரோஹித், தொடக்கம் முதலே அடித்து ஆடிவந்தார். 13வது ஓவரிலேயே சதத்தை எட்டியதால், இரட்டை சதம் அடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. எனவே டி20யிலும் இரட்டை சதமடித்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 118 ரன்களில் அவுட்டாகிவிட்டார். ஆனால் டி20 போட்டியிலும் இரட்டை சதத்தை சாத்தியமாக்குவது ரோஹித்தால் மட்டுமே முடியும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் ரசிகர்களும் நம்புகின்றனர். 

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, ஒருநாள் போட்டியில் இரட்டை சதத்தை முதலில் எட்டியவர் சச்சின். ஆனால் அதன்பிறகு மூன்றுமுறை ரோஹித் இரட்டை சதம் அடித்துவிட்டார். டி 20 போட்டியிலும் ரோஹித் இரட்டை சதமடிப்பதை நாம் பார்க்கத்தான் போகிறோம் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.