தொடர்ச்சியாக இந்தியா ஏ அணியிலும் உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து தனது திறமையை பலமுறை நிரூபித்துவிட்ட போதிலும் மயன்க் அகர்வாலுக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதேபோன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த மயன்க் அகர்வாலுக்கும் ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஒருசில வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது, ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் பலருக்கும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு வழங்கப்படாமல், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்டார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்றிருந்த மயன்க் அகர்வாலுக்கும் ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்காமல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

ஒரு வீரரின் திறமையை களத்தில் நிரூபிக்க வாய்ப்பு கொடுக்காமலேயே புறக்கணிப்பது என்பது மிகப்பெரிய கொடுமை. அந்த கொடுமை கருண் நாயருக்கும் மயன்க் அகர்வாலுக்கும் நேர்ந்துள்ளது. கருண் நாயராவது ஏற்கனவே இந்திய அணியில் ஆடியுள்ளார். ஆனால் மயன்க் அகர்வால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவரும் நிலையில், அவருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. 

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், மயன்க் அகர்வால் மிகவும் துரதிர்ஷ்டமான வீரர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தும் அவரை அணியில் சேர்க்க மறுக்கின்றனர். ஆஸ்திரேலிய தொடரில் முரளி விஜயை எடுக்கும் ஐடியா இருந்திருந்தால், அவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முரளி விஜயை புறக்கணித்துவிட்டு அகர்வாலை எடுத்திருந்தனர். ஆனால் அகர்வாலுக்கு ஆடுவதற்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. அப்படியிருக்கையில், ஆஸ்திரேலிய தொடரில் அகர்வாலை புறக்கணித்துவிட்டு முரளி விஜயை எடுத்துள்ளனர். எந்தவிதமான காரணமுமே இல்லாமல் அகர்வாலை ஆஸ்திரேலிய தொடரில் புறக்கணித்து இந்தியா ஏ அணிக்கு அனுப்பிவிட்டீர்கள். இளம் வீரர்களின் வாழ்க்கையில் தேர்வுக்குழுவினர் அவர்கள் விருப்பப்படி முடிவெடுக்கக்கூடாது. தேர்வுக்குழுவினர் அணி வீரர்களை தேர்வு செய்வதில் உள்ள குழப்பமான நிலையில் இருந்து தெளிவு பெற்று இளம் வீரர்களின் வாழ்க்கையில் மியூசிக்கல் சேர் ஆடுவதை நிறுத்த வேண்டும் என்று காம்பீர் தேர்வுக்குழுவை கடுமையாக சாடியுள்ளார்.