வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மணி அடித்து தொடங்கி வைத்ததற்கு முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர் நடந்துவருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை வென்றுவிட்டது. மூன்றாவது போட்டி மட்டும் எஞ்சியுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கவுரவிக்கும் விதமாக போட்டிகளை முன்னாள் வீரர்கள் மணியடித்து தொடங்கிவைப்பது வழக்கம். அந்த வகையில் கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் மணியடித்து தொடங்கிவைத்தார். இதற்கு கவுதம் காம்பீர் அதிரடியாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

2000-ம் ஆண்டில் சூதாட்ட புகாரில் சிக்கிய அசாருதீன், கிரிக்கெட் விளையாட தடைக்கு உள்ளானார். 12 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீது தவறு இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து தள்ளியே இருந்த அசாருதீன் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவரது மனுவை பிசிசிஐ நிராகரித்தது.

இந்நிலையில், அசாருதீன் மணியடித்து தொடங்கிவைத்ததற்கு அதிருப்தி தெரிவித்து காம்பீர் செய்துள்ள டுவீட்டில், ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் சிஓஏ(கிரிக்கெட் நிர்வாகக்குழு) தோல்வியடைந்துவிட்டது.  ஊழலைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்ற கொள்கை ஞாயிறன்று விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டது போலும். ஹெச்.சி.ஏ. தேர்தல்களில் அசாருதீனை போட்டியிட அனுமதித்தனர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அசாருதீன் போட்டியை தொடங்கிவைத்தது அதிர்ச்சியளித்தது. ஆம் மணி ஒலிக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் கேட்கட்டும் என்று காம்பீர் கடுமையாக விளாசியுள்ளார்.