இந்திய டெஸ்ட் அணிக்கு நல்ல தொடக்க ஜோடி அமைவதற்கான அறிகுறிகள் இப்போதுதான் தென்படுகின்றன. 

இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக இருந்தும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என வெளிநாடுகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. வெளிநாட்டு டெஸ்ட் தொடர் தோல்விக்கு, ஆஸ்திரேலிய தொடரில் முற்றுப்புள்ளி வைத்து வரலாற்றுச்சாதனை படைக்க உள்ளது இந்திய அணி. 

இந்திய அணியில் முன்னெப்போதையும் விட பவுலிங் யூனிட் மிகச்சிறப்பாக இருந்தும் இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து மண்ணை கவ்வியதற்கு முக்கிய காரணம் பேட்டிங்கில் தொடக்க ஜோடிதான். இங்கிலாந்து தொடரில் சோபிக்காத ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்டனர்.

இந்திய அணி பெரிதும் நம்பியிருந்த ராகுல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். இனிமேல் முரளி விஜய்க்கு எல்லாம் டெஸ்ட் அணியில் பெரிதாக வாய்ப்பு வழங்கப்படாது. அவருக்கு வயதும் ஆகிவிட்டது. அதேநேரத்தில் இளம் வீரரான ராகுல் போன்ற வீரர்கள்தான் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் என்பதால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் ராகுல் சொதப்பிவருகிறார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமாகி அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய பிரித்வி ஷா மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமாகி அசத்தலாக ஆடிவரும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் நம்பிக்கையளிக்கின்றனர். ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்றிருந்த பிரித்வி ஷா காயத்தால் தொடரிலிருந்து விலகியதால் வாய்ப்பு பெற்ற மயன்க் அகர்வால், அருமையாக ஆடிவருகிறார். இவரது ஆட்டம் சிறப்பாக உள்ளதால் தொடர்ந்து இவர் டெஸ்ட் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஜோடி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் காம்பீர், மயன்க் அகர்வால் சிறப்பாக ஆடுவது நல்ல விஷயம். இதுதான் அவருக்கு முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம். எனினும் அவர் அருமையாக ஆடிவருகிறார். மயன்க் அகர்வாலின் ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல பிரித்வி ஷாவும் நன்றாக செட்டில் ஆகிவிட்டார். முதல் தொடரிலேயே சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்தார். இவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஜோடியில் இருக்கும் சிக்கலுக்கு தீர்வாக அமைவதுடன் நீண்டகாலம் தொடக்க ஜோடியாக நீடிப்பார்கள் என காம்பீர் தெரிவித்தார். 

அதேநேரத்தில் ராகுல் விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று காம்பீர் வலியுறுத்தினார்.