சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (முதல் பகுதி) பார்சிலோனா அணி நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு கோல் கூட எடுக்காமல் பெரும் தோல்வி கண்டது.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பாரீஸ் அணி 18-ஆவது நிமிடத்திலிருந்து தனது கோல் கணக்கை தொடங்கியது.
ஃப்ரீ கிக் மூலம் கிடைத்த அந்த வாய்ப்பை, அருமையான கோலாக மாற்றினார் அணியின் நட்சத்திர வீரர் டி மரியா.
பாரீஸ் அணியின் இந்த அதிரடி ஆரம்பத்தையடுத்து, பார்சிலோனா அணி தனக்கான முதல் கோல் வாய்ப்புக்கு கடுமையான முயற்சிகளைத் தொடங்கியது.
நெய்மர், மெஸ்ஸி, செளரஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தும், அவர்களின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இந்த நிலையில், பாரீஸ் அணியின் ஜூலியன் டிராக்ஸ்லர் ஆட்டத்தின் 40-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது அந்த அணி.
இரண்டாவது பாதியிலும் பாரீஸின் ஆதிக்கமே தொடர, பார்சிலோனா அணி சுருண்டது. ஆட்டத்தின் 55-ஆவது நிமிடத்தில் பாரீஸின் டி மரியா மீண்டும் ஒரு கோல் அடிக்க, 72-ஆவது நிமிடத்தில் சக வீரர் எடின்சன் கவானி கூடுதலாக ஒரு கோல் சேர்க்க, இறுதியாக 4-0 என வெற்றியை உறுதி செய்தது பாரீஸ் அணி.
முன்னதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதியில் பாயென் முனீச் அணியிடம் 7-0 என்ற கோல் கணக்கில் தோல்வியைச் சந்தித்திருந்தது பார்சிலோனா. அதன் பிறகு இத்தகைய பெரிய தோல்வியை அந்த அணி சந்தித்துள்ளது.
