ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன், சிவா தாபா, சுமித் சங்வான், அமித் பாங்கல் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவுக்கு நான்கு பதக்கம் உறுதியாகியுள்ளது.

ஆசிய குத்துச்சண்டை போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 60 கிலோ எடைப் பிரிவின் காலிறுதியில் சீன தைபேவின் சூ யென் லாயை தோற்கடித்தார் சிவ தாபா.

இதன்மூலம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் மூன்றாவது முறையாக பதக்கத்தை உறுதி செய்திருக்கிறார் சிவ தாபா.

இவர் தனது அரையிறுதியில் மங்கோலியாவின் சின்ஸாரிங் படார்சுக்கை சந்திக்கிறார்.

75 கிலோ பிரிவில் விகாஸ் கிருஷ்ணன் தனது காலிறுதியில் இந்தோனேசியாவின் பிரம்ம ஹேந்திராவை வீழ்த்தினார்.

அடுத்ததாக தென் கொரியாவின் டாங்கியூன் லீயை எதிர்கொள்கிறார் விகாஸ்.

சுமித் சங்வான் 91 கிலோ பிரிவில் தனது காலிறுதியில் சீனாவின் ஃபெங்காயை வீழ்த்தி அரையிறுதியில் தஜிகிஸ்தானின் ஜகோன் குர்போனோவை எதிர்கொள்கிறார்.

அமித் பாங்கல் 49 கிலோ எடைப் பிரிவின் காலிறுதியில், இந்தோனேசியாவின் கார்னெலிஸ் குவாங்குவை வீழ்த்தினார்.

அமித் தனது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் துஸ்மடோவுடன் எதிர்கொள்கிறார்.

விகாஸ் கிருஷ்ணன், சிவா தாபா, சுமித் சங்வான், அமித் பாங்கல் ஆகிய நால்வரும் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.