இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணி 3-1 என தொடரை வெல்லும், போட்டி டிரா ஆனாலும் 2-1 என இந்திய அணி தொடரை வெல்லும். 

இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஆனால் இந்திய அணியை வரலாறு சாதனை படைக்கவிடாமல் தடுக்க, ஆஸ்திரேலிய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குவதால் அந்த அணிக்குத்தான் கூடுதல் நெருக்கடி. எனவே அந்த நெருக்கடியை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ளும். 

இந்நிலையில், மூன்றாவது போட்டிக்கான 13 வீரர்களை கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் காயமடைந்ததால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் ஆடாத அஷ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூன்று ஸ்பின்னர்களின் பெயரும் அணியில் இடம்பெற்றுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டார் அஷ்வின். ஆனால் காயம் காரணமாக பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனின் பந்துவீச்சுதான் இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருவேளை அந்த போட்டியில் அஷ்வின் ஆடியிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த போட்டியில் ஸ்பின் பவுலரே இல்லாமல் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியது. ஸ்பின்னரே இல்லாமல் களமிறங்கியதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 

இதையடுத்து மெல்போர்ன் டெஸ்டில் ஜடேஜா அணியில் எடுக்கப்பட்டார். சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் மூன்று ஸ்பின்னர்களுமே அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் மூவரில் இருவர் ஆட வாய்ப்புள்ளது. காயத்திலிருந்து மீண்ட அஷ்வின், அடுத்த போட்டியில் ஆடுவதற்கு உடற்தகுதி பெற்றுள்ளாரா? அவர் நாளைய போட்டியில் ஆடுவாரா? என்பது போட்டி தொடங்குவதற்கு முன்பாகத்தான் தெரியும். ஆனால் அவர் ஆடுவதற்கான வாய்ப்புகள் குறைவே. அதனால்தான் 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் குல்தீப் யாதவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடர் குறித்தும் ஸ்பின் பவுலிங் குறித்தும் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஈஏஎஸ் பிரசன்னா, மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அந்த பேட்டியில், குல்தீப் யாதவ் பெர்த் டெஸ்டில் ஆடியிருந்தால், இந்நேரம் இந்திய அணி 3-0 என தொடரை வென்றிருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பிரசன்னா, கேப்டன் விராட் கோலியும் அணி நிர்வாகமும் பெர்த் டெஸ்டில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கி தவறு இழைத்துவிட்டார்கள். அந்த போட்டியில் குல்தீப் யாதவை சேர்த்திருந்தால் இந்நேரம் 3-0 என தொடரை வென்றிருக்கலாம். ஆனால் முடிந்ததை பற்றி பேசி பயனில்லை. சிட்னியில் நடக்க உள்ள கடைசி போட்டியில் அஷ்வின் உடற்தகுதியுடன் இல்லாத பட்சத்தில் கண்டிப்பாக குல்தீப் யாதவை இறக்க வேண்டும். குல்தீப் மற்றும் ஜடேஜா என இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வேண்டும். சிட்னி ஆடுகளம் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்கும். எனவே இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற அருமையான வாய்ப்புள்ளது என்று பிரசன்னா தெரிவித்துள்ளார்.