இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா விஷயத்தில் அவசரப்பட வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கூறியதை போலவே மற்றொரு முன்னாள் கேப்டனான அசாருதீனும் அறிவுறுத்தியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பிரித்வி ஷா, முதல் போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்தார். இதன்மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்த்துள்ளார் பிரித்வி ஷா. 

ரஞ்சி டிராபி, துலீப் டிராபி ஆகிய தொடர்களில் அறிமுக போட்டியில் சதமடித்த பிரித்வி ஷா, சர்வதேச போட்டியிலும் முதல் போட்டியிலேயே சதம் விளாசினார். சர்வதேச போட்டியில் அறிமுகமாவதால், பதற்றமோ பயமோ இல்லாமல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடினார் பிரித்வி ஷா. அதுதான் அனைவரின் பார்வையையும் பிரித்வி ஷாவின் பக்கம் திருப்பியது. 

பிரித்வி ஷாவின் அபாரமான ஆட்டத்தை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டிவருகின்றனர். பிரித்வி ஷா ஒரு போட்டியில் தான் ஆடியிருக்கிறார். அதற்குள்ளாக சச்சின் டெண்டுல்கருடனும் வீரேந்திர சேவாக்குடனும் ஒப்பிடப்படுகிறார். 

இவரது பேட்டிங் ஸ்டைல் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை ஒத்திருப்பதால், இந்திய அணியின் அடுத்த சச்சின் என அழைக்கப்படுகிறார். மேலும் இவரது ஆட்டத்தை பார்த்த ரெய்னா, பிரித்வி ஷா சேவாக்கை நினைவுபடுத்துவதாக தெரிவித்தார். 

பிரித்வி ஷாவை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகியோரின் கலவை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ் புகழ்ந்தார். பிரித்வி ஷா, இளம் வயது சச்சின் மற்றும் கவாஸ்கரை நினைவுபடுத்துவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பவுலர் குர்ட்னி வால்ஷ் புகழ்ந்திருந்தார்.

பிரித்வி ஷா சிறப்பாக ஆடினார். அவர் ஒரு போட்டியில்தான் ஆடியிருக்கிறார். அவர் நல்ல திறமையான வீரர் என்றாலும், அவர் வெளிநாடுகளிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வளரட்டும். அதற்குள்ளாக அவரை சேவாக்குடன் எல்லாம் ஒப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கங்குலியின் கருத்தை ஒத்த கருத்தைத்தான் அசாருதீனும் கூறியுள்ளார். பிரித்வி ஷா விஷயத்தில் அவசரப்படாமல் அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அசாருதீன், ஒரு போட்டியில் தான் பிரித்வி சிறப்பாக ஆடியிருக்கிறார். 18 வயதில் அறிமுக போட்டியிலேயே சதமடிப்பது சாதாரண விஷயமல்ல. அவர் திறமையான வீரர் தான்; எனினும் அதற்குள்ளாகவே முன்னாள் ஜாம்பவான்களுடன் ஒப்பிடக்கூடாது. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடும் வீரர்களை ஒப்பிடவே கூடாது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு சிறந்த வீரர்கள் இருந்துள்ளனர். அவர் இயல்பான ஆட்டத்தை தொடர்ந்து ஆட வேண்டும். கிரிக்கெட் வாழ்வில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் இதுபோன்ற ஒப்பீடுகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயல்பான ஆட்டத்தை பிரித்வி ரசித்து ஆட வேண்டும் என்று அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார்.