பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு பேச்சு; மன்னிப்பு கேட்ட ஈஷா குகா!
இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை குரங்கு இனத்துடன் பும்ராவை ஒப்பிட்டு பேசினார். இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து முன்னாள் பெண் வீராங்கனை ஈஷா குகா பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது ஒரு டிவிக்காக பிரட்லீயும், ஈஷா குகாவும் கமெண்ட்டரி செய்து கொண்டிருந்தனர். அப்போது பிரட்லீ பும்ராவை மிகவும் சிறப்பாக விளையாடி வருவதை குறிக்கும் வகையில் Most valuable player
என்று பாரட்டினார். இதனைத் தொடர்ந்து ஈஷா குகாவும் பும்ராவை பாராட்டுவாதாக நினைத்து most valuable Primate(மிகவும் மதிப்புமிக்க பிரைமேட்) என்று தெரிவித்தார்.
பொதுவாக குரங்கு போன்ற பெரிய வகை பாலூட்டி விலங்குகளை பிரைமேட் என்று அழைப்பார்கள். ஆகையால் ஈஷா குகா பிரைமேட் என அழைத்து இருப்பதற்கு எதிர்புகள் குவிந்தன. ''ஒரு வீரரை பாராட்ட எத்தனையோ நல்ல வார்த்தைகள் உள்ளன. ஆனால் ஈஷா குகா வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்'' என்று இந்திய ரசிகர்கள் தெரிவித்தனர்.
''ஈஷா குகா தான் பயன்படுத்திய வார்த்தையை திரும்ப பெற வேண்டும். அவர் கமெண்ட்டரி செய்வதை தடை விதிக்க வேண்டும்'' என்று தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், குரங்கு இனத்துடன் பும்ராவை ஒப்பிட்டு பேசிய இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை ஈஷா குகா மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக இன்று 3ம் நாள் ஆட்டத்தின்போது வர்னணையில் பேசிய அவர், ''பும்ரா குறித்து நான் பயன்படுத்திய வார்த்தையில் ஏதேனும் குற்றம் இருந்தால் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
பும்ரா நான் மிகவும் போற்றும் ஒருவர்; அவரை பாராட்ட தான் நான் முயற்சித்தேன். ஆனால் பாராட்ட நான் தேர்ந்தெடுத்த வார்த்தை தவறானது என்பதால் வருந்துகிறேன். நீங்கள் எனது முழு பேச்சையும் கேட்டால் நான் தலைசிறந்த வீரர்களில் ஒருவரை பாராட்டினேன் என்பது உங்களுக்கு புரியும்.
நான் அவரது சாதனையின் மகத்துவத்தை வடிவமைக்க முயற்சித்தேன். தெற்காசிய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில், நான் பேசியதில் வேறு எந்த நோக்கமும் தீமையும் இல்லை என்பதை மக்கள் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.