இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் சதமடித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து இந்திய இன்னிங்ஸை காப்பாற்றிய புஜாரா முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் நனைகிறார். 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள், ராகுல் 19 ரன்களிலும் தவான் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதன்பிறகு கோலி-புஜாரா ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை குவித்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 92 ரன்களை சேர்த்தது. 46 ரன்களில் கோலி அவுட்டானார். 

அதன்பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ரஹானே(11), பண்ட்(0), ஹர்திக் பாண்டியா(4), அஷ்வின்(1), ஷமி(0), இஷாந்த் (14), பும்ரா(6) என அனைத்து விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழுந்தன. ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் பொறுப்புடன் ஆடிய புஜாரா, சதமடித்து அசத்தினார். 

புஜாராவின் விக்கெட்டை கடைசி வரை இங்கிலாந்து பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. புஜாராவை தவிர்த்து மறுமுனையில் களமிறங்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை ஆல் அவுட் செய்தது இங்கிலாந்து அணி. புஜாரா 132 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை விக்கெட்டுகள் சரிவிற்கு மத்தியிலும் பொறுப்பாக ஆடி, மீட்டெடுத்தார் புஜாரா. புஜாராவின் அருமையான பேட்டிங்கை முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக், சஞ்சய் மஞ்சரேக்கர் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். 

புஜாராவின் ஆட்டத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்ததாகவும் முக்கியமான இன்னிங்ஸ் இது எனவும் சச்சின் டுவிட்டரில் பாராட்டியுள்ளார். 

சில இன்னிங்ஸ்கள் மட்டுமே மிக உயர்ந்த இடத்தை பெற்றுத்தரும். அதுமாதிரியான ஒரு இன்னிங்ஸ்தான் புஜாரா ஆடியது. நீண்ட காலத்துக்கு மறக்க முடியாத இன்னிங்ஸாக இது இருக்கும் என சேவாக் பாராட்டியுள்ளார்.

என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ்..! புஜாரா ஆடியது உறுதியான ஆட்டம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளருமான டாம் மூடி பாராட்டியுள்ளார்.

இதேபோல, விவிஎஸ் லட்சுமணன், ஆகாஷ் சோப்ரா, இர்ஃபான் பதான், சஞ்சய் மஞ்சரேக்கர், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆகியோரும் புஜாராவின் இன்னிங்ஸை பாராட்டியுள்ளனர்.