இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட கருண் நாயருக்கு பதிலாக ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது தொடர்பாக முன்னாள் வீரர்களுக்கு இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது. 

இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்ற நிலையில், கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் ஆடும் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரியும் சேர்க்கப்பட்டனர்.

ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டதற்கு கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்திருந்தார். 6 பேட்ஸ்மேன்களை அணியில் சேர்ப்பதாக இருந்தால் கருண் நாயருக்குத்தான் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும். அணி நிர்வாகத்திற்கு கருண் நாயரை பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இதுதொடர்பாக அணி நிர்வாகத்திடம் கருண் நாயர் கேள்வி கேட்க முழு உரிமை இருக்கிறது. கருண் நாயருக்கு அணி நிர்வாகம் கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார். 

கடந்த 2016ம் ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் அடித்தவர் கருண் நாயர். சேவாக்கிற்கு அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரர் கருண் நாயர் தான். 

முதல் போட்டியிலிருந்தே இந்திய அணியில் இருக்கிறார் கருண் நாயர். ஆனால் அவரை விடுத்து, நான்காவது போட்டியில் இந்திய அணியில் எடுக்கப்பட்ட ஹனுமா விஹாரிக்கு ஐந்தாவது போட்டியில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டதற்கு ஹர்பஜன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் கருண் நாயர் சேர்க்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். 6 பேட்ஸ்மேன்கள் அணியில் எடுக்க முடிவு செய்தால், கருண் நாயர் தான் முதல் சாய்ஸாக இருந்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கவாஸ்கர், ஹர்பஜன் சிங், ஆகாஷ் சோப்ரா ஆகியோர் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கர் மட்டும் அணி நிர்வாகத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கருண் நாயர் விவகாரத்தில் முன்னாள் வீரர்கள் அனைவரும் கருண் நாயருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவரும் நிலையில், சஞ்சய் மஞ்சரேக்கர் மட்டும் எதிர்நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.