இந்தியாவில் முதன்முறையாக ஆடவருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியின்ஷிப் போட்டி வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளது.

சர்வதேச குத்துச்சண்டை சங்க (ஏஐபிஏ) தலைவர் சிங் குவோ வு வெளியிட்டுள்ள அறிக்கை:

“'2019-ஆம் ஆண்டுக்கான ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி 2019-ஆம் ஆண்டு ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெறும். 2021-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறும்.

அதேபோல், 2018-ஆம் ஆண்டுக்கான மகளிர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவிலும், 2019-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியிலும் நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆடவர் குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டி இதுவரை நடத்தப்படவில்லை. எனினும், 2006-ஆம் ஆண்டில் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு தொடர்பாக, இந்திய ஆடவர் குத்துச்சண்டை பயிற்சியாளர் சான்டியாகோ நீவா, மகளிர் குத்துச்சண்டை பயிற்சியாளர் குருபாக்ஸ் சிங் சாந்து, விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், குத்தச்சண்டை வீராங்கனை மேரி கோம், வீரர் அகில் குமார் ஆகியோர் மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர்.