For the first time appointment of the woman as the Director of ICC That is the Indian girl ...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) முதல் பெண் தனி இயக்குநராக இந்தியரான இந்திரா நூயி (62) நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஐசிசியில் தனி இயக்குநர் என்ற பொறுப்பை புதிதாக கொண்டுவரவும், அதற்கு பெண் ஒருவரை நியமிக்கவும் ஐசிசியின் முழு கவுன்சில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.
ஐசிசி நிர்வாகத்தை மேம்படுத்த அதன் விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் பலனாக இந்த புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டது.
துபையில் நேற்று நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்த நியமனத்துக்கு உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி, பெப்சிகோ நிறுவன தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி வரும் ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐசிசி) முதல் பெண் தனி இயக்குநராக பொறுப்பேற்கிறார்.
இதுகுறித்து இந்திரா நூயி, "ஐசிசியில் முதல் பெண் தனி இயக்குநராக இணைவதற்கு ஆர்வத்துடன் உள்ளேன். கிரிக்கெட்டை பொறுப்புடையதாகவும், அவ்விளையாட்டில் ரசிகர்கள் ஒவ்வொன்றையும் ரசிக்கும் படி செய்யும் வகையிலும், வாரிய உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
ஐசிசி தனி இயக்குநராக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படும் ஒருவருக்கு, அடுத்தடுத்து 2 ஆண்டுகளுக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படலாம். எனவே, தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவர் அந்தப் பதவியில் தொடர இயலும்.
