football saved in india remind vallinam movie

கென்யாவுக்கு எதிரான கால்பந்து போட்டியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு, நாங்கள் நாட்டுக்காக விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் கிடைத்தால், களத்தில் உயிரைக் கொடுத்து விளையாடுவோம் என இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் ஆதரவு வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைப்பதில்லை. விளையாட்டு வீரர்களின் பிரதான தேவையே ஆதரவும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும் தான். அது கிரிக்கெட்டுக்கு மட்டுமே கிடைக்கிறது. வேறு எந்த விளையாட்டுக்கும் கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால் மற்ற விளையாட்டுகள் நலிவடைவதை மையமாக வைத்து தமிழில் அறிவழகன் இயக்கத்தில் வல்லினம் என்ற திரைப்படம் வெளியானது. அதில், கிரிக்கெட்டிற்கு பெரிய மார்க்கெட்டும் அதற்கு பெரியளவிலான ஸ்பான்ஷர்ஷிப்பும் கிடைப்பதால் விளையாட்டு என்பதை கடந்து அது மிகப்பெரிய வியாபாரமாக வளர்ந்து மற்ற விளையாட்டுகளை நலிவடைய செய்ததையும், மற்ற விளையாட்டுகளையும் காக்க வேண்டும் என்ற வகையில், கூடைப்பந்தை மையமாக வைத்து அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர் அறிவழகன்.

அந்த படத்தில் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் ஆதரவும் வரவேற்பும் தங்களுக்கு கிடைக்காததை எண்ணி வருந்தும் கூடைப்பந்து வீரர்கள், தங்களது திறமையை நிரூபித்து சிறப்பாக ஆடினால் கூடைப்பந்து விளையாட்டு மட்டுமல்லாமல் எந்த விளையாட்டுக்கும் ஆதரவும் வரவேற்பும் வீரர்கள் விரும்பும் ஆர்ப்பரிப்பும் கிடைக்கும் என்பதாக திரைப்படம் முடியும்.

இதேபோன்றதொரு நிகழ்வு, தற்போது நிஜத்திலும் நடந்துள்ளது. கால்பந்து விளையாட்டுக்கு இந்தியாவில் ஆதரவு கிடைக்காததால் மனமுடைந்த கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, மனம் வருந்தி கால்பந்து விளையாட்டுக்கு ஆதரவு கேட்டு டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், இந்திய கால்பந்து அணிக்கு மக்களும் ரசிகர்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இணையத்தில் எங்களை விமர்சிப்பதை விடுத்து, மைதானத்திற்கு எங்களை திட்டுங்கள், விமர்சனம் செய்யுங்கள். யாருக்கு தெரியும்..? ஒருநாள் இவையெல்லாவற்றையும் நாங்கள் மாற்றக்கூடும். நீங்களும் மாறக்கூடும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சுனில் சேத்ரியின் பதிவைக் கண்ட இந்திய கேப்டன் விராட் கோலி, சச்சின் ஆகியோர் விளையாட்டில் பேதம் பார்க்காமல் தேசத்திற்காக ஆடும் அனைத்து விளையாட்டுகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். 

இந்த சம்பவத்தால் கால்பந்து விளையாட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் நடந்துவரும் இன்டர்கான்டினென்டல் கால்பந்து போட்டியில் திங்கட்கிழமை இந்தியாவும் கென்யாவும் மோதின. இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். மைதானம் முழுவதும் நிரம்பியிருந்த ரசிகர்கள், வீரர்களை உற்சாகப்படுத்தினர். இந்த போட்டியில் இந்திய அணி 3 - 0 கணக்கில் அசத்தலான வெற்றியை ரசிகர்களுக்கு பரிசளித்தது.

இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான சுனில் சேத்ரி தனது 100வது சர்வதேச போட்டியில் இரண்டு கோல்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இந்திய அணியின் வெற்றியை ரசிகர்களும் சமூக வலைதளவாசிகளும் கொண்டாடி வருகின்றனர்.

கால்பந்து விளையாட்டிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு கிடைத்த ஆதரவையும் ரசிகர்கள் அளித்த உற்சாகத்தையும் கண்டு நெகிழ்ந்து போன கேப்டன் சுனில் சேத்ரி, ஒருவேளை இதே ஆதரவு நாட்டுக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிகயிலும் கிடைத்தால் களத்தில் நாங்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவோம் என்று உறுதி அளிக்கிறேன். இந்த இரவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் நாம் அனைவரும் இணைந்து இருந்தோம். மைதானத்தில் நின்று எங்களுக்காக குரல் எழுப்பியவர்களுக்கும், வீட்டிலிருந்து எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

சுனில் சேத்ரியின் வேண்டுகோளை ஏற்று கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் ஆதரவளித்தனர். அந்த ஆதரவை தக்கவைக்கும் விதமாக ரசிகர்களுக்கு வெற்றியை பரிசளித்து, கிரிக்கெட்டை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த விளையாட்டு ரசிகர்களையும் மக்களையும் கால்பந்தை நோக்கியும் ஈர்த்திருக்கிறது இந்திய கால்பந்து அணி.