செப்டம்பர் 14 - இன்றைய தினம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத முக்கியமான தினம். பாகிஸ்தானை வித்தியாசமான முறையில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற தினம்.

தோனி கேப்டனான புதிதில் 2007ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. செப்டம்பர் 14ல்(இதேநாள்) இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 141 ரன்கள் எடுத்தது. 142 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க விக்கெட்டுகள் விழுந்துவிட, மிஸ்பா உல் ஹக் மட்டும் கடைசி வரை நின்றார். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. நெருக்கடியான அந்த ஓவரை ஸ்ரீசாந்த் வீசினார். 

முதல் பந்தில் யாசிர் அராஃபத் சிங்கிள் தட்ட, பேட்டிங் முனைக்கு சென்ற மிஸ்பா உல் ஹக் அடுத்த மூன்று பந்துகளில் 10 ரன்களை சேர்த்தார். அதனால் கடைசி 2 பந்தில் பாகிஸ்தானின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவை. இப்படியொரு இக்கட்டான சூழலில், ஐந்தாவது பந்தில் மிஸ்பா ரன் எடுக்கவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட, அதையும் ஸ்ரீசாந்த் அருமையாக வீசினார். அந்த பந்தில் ஒரு ரன் ஓட முயன்ற மிஸ்பா, ரன் அவுட்டானார். அதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. 

இதையடுத்து ஒவ்வொரு அணியிலிருந்தும் 5 வீரர்கள் பவுலிங் போட அழைக்கப்பட்டனர். அதில் எந்த அணியின் வீரர்கள் அதிகமாக ஸ்டம்பில் அடித்து போல்டு செய்கிறார்களோ அந்த அணி வெற்றி பெறுவதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு இரு அணி கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து முதல் பந்தை வீசிய இந்திய வீரர் சேவாக் துல்லியமாக போல்டு செய்தார். அதேநேரத்தில் பாகிஸ்தான் வீரர் யாசிர் அராஃபத் போல்டு செய்ய தவறினார். அடுத்ததாக சுழல் மன்னன் ஹர்பஜன் சிங், அருமையாக ஸ்டம்பை தாக்கினார். பாகிஸ்தான் தரப்பில் உமர் குல்லும் ஸ்டம்பை மிஸ் செய்தார். மூன்றாவதாக உத்தப்பாவும் துல்லியமாக ஸ்டம்பில் போட்டு போல்டு செய்ய, பாகிஸ்தானின் அஃப்ரிடியும் போல்டு செய்ய தவறினார். 

இந்திய அணியின் மூன்று வீரர்களும் கிளீன் போல்டு செய்தனர். பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட ஸ்டம்பை தாக்கவில்லை. எனவே அதனடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் வெற்றியை தீர்மானிக்க கடைபிடிக்கப்பட்ட புதிய முறை இது. இப்படியொரு வித்தியாசமான முறையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற தினம் இன்று. இந்த உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தித்தான் இந்திய அணி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.