தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 76 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 225 ஓட்டங்கள் எடுத்து அசத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா அணி அந்நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 76 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேமரான் பென்கிராஃப்ட் 5 ஓட்டங்களில் பிளாண்டர் வீசிய ஓவரில் குவிண்டன் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டேவிட் வார்னர் நிதானமாக விளையாடிக் கொண்டிருக்க, அடுத்து களம் இறங்கிய உஸ்மான் கவாஜா 11.4-வது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் குவிண்டனிடம் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார்.

பின்னர் களம் கண்ட கேப்டன் ஸ்மித் நிதானமாக விளையாடி, வார்னருடன் அணிக்காக ரன் குவிப்பில் ஈடுபட்டார். எனினும், 26.6-வது ஓவரில் ஆட்டமிழந்தார் வார்னர். அப்போது, அவர் 51 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

ஷான் மார்ஷ், ஸ்மித்துக்கு உதவினார். நிதானமாக விளையாடிய ஸ்மித் 43.1-வது ஓவரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 56 ஓட்டங்கள்  எடுத்திருந்தபோது, கேசவ் மஹராஜ் வீசிய பந்தில் டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

மார்ஷ் 77 பந்துகளில் 32 ஓட்டங்களுடனும், விக்கெட் கீப்பர் டிம் பைன் 51 பந்துகளில் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில், அதிகபட்சமாக பிளாண்டர், கேசவ் மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரபாடா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.