இஷாந்த் சர்மா செய்த சிறு தவறால் இரண்டாவது பந்திலேயே அவுட்டாகியிருக்க வேண்டிய ஆரோன் ஃபின்ச், அதிர்ஷ்டத்தில் தப்பினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

15 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் ரஹானே மற்றும் புஜாராவின் பொறுப்பான அரைசதத்தால் இந்திய அணி 307 ரன்களை எடுத்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியைவிட 322 ரன்கள் முன்னிலை வகித்தது இந்திய அணி.

323 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச் இஷான் சர்மா வீசிய இரண்டாவது பந்திலேயே எல்பிடபுள்யூ ஆனார். அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். ஆனால் ஃபின்ச், பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றுவிடும் என்ற கணிப்பில் ரிவியூ கேட்க, அவரது அதிர்ஷ்டம் அந்த பந்து நோ பாலானது. இதையடுத்து களத்தில் நீடித்த ஃபின்ச், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

11 ரன்களில் அஷ்வினிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.