finally punjab purchased chris gayle
11வது ஐபிஎல் சீசனின் வீரர்களுக்கான ஏலம் பெங்களூருவில் நேற்றும் இன்றும் நடைபெற்றது.
இதில், சேவாக் ஆலோசகராக உள்ள ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணி, அதிரடி வீரர்களை வாங்கி குவித்துள்ளது.
இந்தியாவின் அதிரடி வீரர் லோகேஷ் ராகுலை 11 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி எடுத்தது. தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லரை ஆர்டிஎம் முறையை பயன்படுத்தி தக்கவைத்தது.
மேலும் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஆரோன் ஃபிஞ்ச், ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், இந்தியாவின் கருண் நாயர் ஆகிய வீரர்களை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்த ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து அணியினரும் எடுத்தனர். இதனால், கிறிஸ் கெய்ல், ஜோ ரூட், மோர்கன், ஆம்லா, கோரி ஆண்டர்சன், ஃபாக்னர், ஷான் மார்ஷ், மலிங்கா, ஸ்டெயின் போன்ற முன்னணி வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர்.
இரண்டாவது முறை ஏலம் விடப்பட்டபோது முரளி விஜயை அடிப்படை விலையான 2 கோடிக்கு சென்னை அணி எடுத்தது.
ஆனால் இரண்டாவது முறையும் கெய்ல் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மூன்றாவது முறையாக கடைசியாக கெய்ல் ஏலத்தில் விடப்பட்டபோது, அதிரடி மன்னன் சேவாக் ஆலோசகராகவுள்ள பஞ்சாப் அணி, கெய்லை அடிப்படை விலையான 2 கோடிக்கு எடுத்தது.
இதையடுத்து, ராகுல், கருண் நாயர், ஆரோன் ஃபிஞ்ச், கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்களின் கூடாரமாக உள்ளது. அந்த அணியின் ஆலோசகர் சேவாக், இவர்களை எல்லாம் விட அதிரடி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சேவாக்கின் ஆலோசனையின்படி, இந்த அதிரடி பட்டாளம் ஐபிஎல்லில் அதகளப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
