federer won 6th australian open tennis champion

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி 20-வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையை வென்று முத்தமிட்டார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஃபெடரர் 6-2, 6-7(5/7), 6-3, 3-6, 6-1 என்ற செட்களில் உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச்சை வீழ்த்தினார்.

இந்த இறுதி ஆட்டத்தில் சிலிச்சின் சர்வ்களை 6 முறை பிரேக் செய்த ஃபெடரர், தனது 2 சர்வ்களை அவரிடம் இழந்தார். மொத்தமாக ஃபெடரர் 24 ஏஸ்களையும், சிலிச் 16 ஏஸ்களையும் பறக்க விட்டனர். வெற்றி பெற்ற ஃபெடரர் உணர்ச்சி வசத்தில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஃபெடரர், "மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் என்னால், இந்தப் பட்டம் வென்றதை நம்ப இயலவில்லை. ஒரு கனவு நனவானதைப் போல உள்ளது. இந்த ஒருநாளில், இந்த வெற்றித் தருணத்தை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறேன். இந்த இறுதி ஆட்டம் 2006-ஆம் ஆண்டு மார்கோஸ் பக்தாதிஸை வீழ்த்தி பட்டம் வென்ற தருணத்தை எனக்கு நினைவூட்டுகிறது. அதைப் போலவே இந்த இறுதி ஆட்டத்திலும் உணர்ந்தேன்' என்றார்.

இத்துடன் சிலிச்சை 10 முறை நேருக்கு நேர் சந்தித்த ஃபெடரர், தனது 9-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இது ஃபெடரரின் 6-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம். டென்னிஸின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 20 பட்டம் வென்ற ஒரே வீரர் என்ற பெருமையை ஃபெடரர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.