fan got blessing from dhoni during match

இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி, சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

இலங்கைக்கு எதிராக தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, ரோஹித் சர்மாவின் ருத்ர தாண்டவத்தால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி பெற்றது.

ஒருநாள் கிரிக்கெட்டில், மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ரோஹித். தனது இரண்டாவது திருமண நாளான நேற்று, தான் அடித்த இரட்டை சதத்தை தனது மனைவிக்கு பரிசாக அளிப்பதாக ரோஹித் தெரிவித்தார். ரோஹித் இரட்டை சதத்தை நெருங்கியபோது, களத்தில் விளையாடும் அவரைவிட அவரது மனைவி மிகவும் பதறிவிட்டார். ரோஹித் இரட்டை சதம் அடித்தவுடன், அவரது மனைவி கண்கலங்கிவிட்டார். ரோஹித்தின் அதிரடி இரட்டை சதம், அவரது மனைவியின் ஆனந்த கண்ணீர் என போட்டியே நெகிழ்ச்சியாக இருந்தது.

அதன்பிறகு, இலங்கை அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்துவிட்டார். அவரைத் தடுத்து நிறுத்துவதற்காக பாதுகாவலர் ஒருவர் பின்தொடர்ந்து ஓடிவந்தார். ஆனால், அவரைவிட வேகமாக ஓடிவந்த அந்த ரசிகர், கீப்பிங் செய்துகொண்டிருந்த தோனியை நோக்கி ஓடினார். தோனியிடம் சென்று அவரது காலைத் தொட்ட பின்னரே, அந்த ரசிகரின் ஓட்டம் நின்றது. காலில் விழ முயன்ற ரசிகரை தோனி தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் அதையும் மீறி அந்த ரசிகர் தோனியின் காலில் விழுந்தார். இதையடுத்து ரசிகரைத் துரத்தி வந்த பாதுகாவலர், மைதானத்துக்கு வெளியில் அவரை அழைத்துச்சென்றார். 

இச்சம்பவமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.