சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா-பாகிஸ்தான் நாளை மோத உள்ள நிலையில், இந்திய வீரர் சுப்மன் கில் மீதும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை மூன்று ஆட்டங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி துபாயில் நாளை நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்த போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இரு அணி வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களுக்கு விருந்து படைக்க ரெடியாக உள்ளனர்.
இந்திய அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடி உள்ளது. ஆனால் பாகிஸ்தானின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவிய பாகிஸ்தான், இந்திய போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி கனவை நினைத்துப் பார்க்க முடியும். மாறாக, தோல்வி அடைந்தால் போட்டியை விட்டு வெளியேறி விடும்.
கிரிக்கெட்டின் இளவரசரின் அசாத்திய பேட்டிங்
இரு அணிகளிலும் போட்டியை திருப்பக் கூடிய திறன் படைத்த அதிரடி சூரர்கள் இருக்கும் நிலையில், இவர்களில் இந்திய கிரிக்கெட்டின் இளவரசர் சுப்மன் கில்லும், பாகிஸ்தான் சூப்பர் ஸ்டார் பாபர் அசாமும் தனித்து நிற்கின்றனர். முதலில் சுப்மன் கில்லை எடுத்துக் கொண்டால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சூப்பர் சதம் விளாசி அணியை தனி ஆளாக வெற்றி பெற வைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுமோசமாக விளையாடிய சுப்மன் கில் மீது விமர்சன கணைகள் பாய்ந்தன.
ஆனால் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியிலேயே சதம் விளாசி தான் யாரென்று நிரூபித்துள்ளார் இந்த இளவரசர். ஓருநாள் போட்டித் தொடர் என்று வந்துவிட்டாலே குஷியாகி விடும் சுப்மன் கில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் ஒரு சதம், இரண்டு அரை சதம் என 249 ரன்கள் குவித்து பிரம்மிக்க வைத்தார். கடைசி 5 ஓடிஐ போட்டிகளில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடித்து அசத்தியுள்ளார். மொத்தம் 51 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 62.51 ஆவரேஜுடன் 2688 ரன்கள் அடித்துள்ளார். இதில் 8 சதங்களும், 15 அரை சதங்களும் அடங்கும்.
பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டார் எப்படி?
மறுபக்கம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வரும் பாபர் அசாம் விராட் கோலிக்கு நிகராக வைத்து போற்றப்படுகிறார். 'கிரிக்கெட்டின் ரன் மெஷின்' என்று அழைக்கப்படும் பாபர் அசாம் சமீப காலமாக ஓடிஐ பார்மட்களில் ரன்கள் அடிக்கத் திணறி வருகிறார். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் முத்தரப்பு தொடரில் 4 போட்டிகள் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 64 ரன்கள் அடித்து ஓரளவு பழைய பார்முக்கு வந்துள்ளார் பாபர் அசாம்.
கலக்கப் போவது யார்?
மொத்தமாக 127 ஒருநாள் போட்டிகளில் 19 சதங்கள், 37 அரை சதங்களுடன் 6083 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி கனவை பாகிஸ்தான் நினைத்து பார்க்க வேண்டுமானல் பாபர் அசாமின் பேட் களத்தில் பேசுவது மிகவும் முக்கியமானதாகும். சுப்மன் கில் மற்றும் பாபர் அசாமின் பெரும் பலமே இருவரும் பாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலிங் என இரண்டையும் சிறப்பாக விளையாடுவதுதான். மேலும் இருவரின் ஷாட்களும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். நாளை நடக்கும் போட்டியில் கலக்கப் போவது இந்தியாவின் இளவரசரா? இல்லை பாகிஸ்தானின் சூப்பர் ஸ்டாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
