Asianet News TamilAsianet News Tamil

சொந்த மண்ணில் முதல் ஆட்டத்திலேயே இங்கிலாந்துக்கு வெற்றி; 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

England win its first match in their own land
England win its first match in their own land
Author
First Published Jun 2, 2017, 11:38 AM IST


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து. இதன்மூலம் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது.

இங்கிலாந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஜோ ரூட் 129 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் குவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இலண்டனில் நேற்று இங்கிலாந்து – வங்கதேசம் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து பேட் செய்த வங்கதேசத்தின் இன்னிங்ஸை தமிம் இக்பாலும், செளம்ய சர்க்காரும் தொடங்கினர். இந்த இணை நிதானமாக ஆமைப்போல ஆடி முதல் 10 ஓவர்களில் 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

ஜேக் பால் வீசிய 11-ஆவது ஓவரில் செளம்ய சர்க்கார் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாச, அந்த ஓவரில் 16 ஓட்டங்கள் கிடைத்தன.

வங்கதேசம் 12 ஓவர்களில் 56 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சர்க்காரின் விக்கெட்டை இழந்தது. அவர் 34 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிந்தார்.

பின்னர் வந்த இம்ருள் கயெஸ் 19 ஓட்டங்களில் வெளியேறிபோது வங்கதேசம் 19.2 ஓவர்களில் 95 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் களமிறங்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய தமிம் இக்பால் 71 பந்துகளில் அரை சதம் கண்டார். தமிம் - ரஹிம் இணை தொடர்ந்து சிறப்பாக ஆட, 28-ஆவது ஓவரில் 150 ஓட்டங்களை எட்டியது வங்கதேசம்.

பிறகு அதிரடியாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம், ஜோ ரூட் பந்துவீச்சில் பவுண்டரியை விளாசி, 48 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். அவரைத் தொடர்ந்து தமிம் இக்பால் 124 பந்துகளில் சதமடித்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 9-ஆவது சதம் இது.

இந்த இணை தொடர்ந்து அசத்தலாக ஆட, 44-ஆவது ஓவரில் 250 ஓட்டங்களை எட்டிய வங்கதேச அணி 261 ஓட்டங்களை எட்டியபோது இந்த இணை பிளங்கெட் வீசிய 45-ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் தமிமும், ரஹிமும் ஆட்டமிழந்தனர்.

தமிம் இக்பால் 142 பந்துகளில் 3 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 128 ஓட்டங்கள் குவித்தார். முஷ்பிகுர் ரஹிம் 72 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் வந்த ஷகிப் அல்ஹசன் 10 ஓட்டங்கள், சபீர் ரஹ்மான் 24 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்கள் எடுத்தது வங்கதேசம்.

இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் 300 ஓட்டங்கள் குவிப்பது இதுவே முதல்முறை.

இங்கிலாந்து தரப்பில் லியாம் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் 1 ஓட்டத்த்இல் அவுட்டாக அலெக்ஸ் ஹேல்ஸுடன் இணைந்தார் ஜோ ரூட். இந்த ஜோடி அசத்தலாக ஆட, 10-ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ் 52 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மறுமுனையில் ஜோ ரூட்டும் அசத்தலாக ஆட, 19-ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து.

இதன்பிறகு அதிரடியாக ஆடிய அலெக்ஸ் ஹேல்ஸ், சபீர் ரஹ்மான் வீசிய 28-ஆவது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாச, 95 ஓட்டங்களை எட்டினார். அவர் சதமடிக்காமல் அடுத்த பந்தில் அவுட்டானது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் கேப்டன் இயான் மோர்கன். இந்த ஜோடி அசத்தலாக ஆட, இங்கிலாந்தின் வெற்றி எளிதானது. மோர்கன் 45 பந்துகளில் அரை சதமடிக்க, ஜோ ரூட் 115 பந்துகளில் சதம் கண்டார். இது அவருடைய 10-ஆவது சதமாகும்.

மொஸாதீக் பந்துவீச்சில் ஜோ ரூட் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விரட்ட, 47.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்து வெற்றிக் கண்டது இங்கிலாந்து.

ஜோ ரூட் 129 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள், மோர்கன் 61 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வங்கதேசம் தரப்பில் மோர்ட்டஸா, சபீர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

ஜோ ரூட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

முதல் ஆட்டத்திலேயே அதுவும் சொந்த மண்ணில் தன் பெயரை வெற்றியின் மூலம் நிலைநாட்டிக் கொண்டது இங்கிலாந்து.

Follow Us:
Download App:
  • android
  • ios