இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி நடந்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 304 ரன்கள் குவித்தது. பென் டக்கெட், ஜோ ரூட் அதிரடி அரை சதம் விளாசினார்கள்.

இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் இன்று தொடங்கியது. இந்திய அணி தரப்பில் முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பினார். 

இதேபோல் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியின்மூலம் ஓடிஐயில் அறிமுகமானார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும என அறிவித்தார். அதன்படி பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் களமிறங்கினார்கள். பென் டக்கெட் தொடக்கத்தில் இருந்தே பவுண்டரிகளாக விளாச, பில் சால்ட் நிதானமாக விளையாடினார். 

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில், பில் சால்ட் (26) வருண் சக்கரவர்த்தி பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார். இது வருணின் முதல் ஓடிடி விக்கெட்டாகும். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பென் டெக்கெட் சூப்பர் அரை சதம் (56 பந்தில் 65 ரன்) அடித்து அவுட் ஆனார். பின்பு களம் புகுந்த ஹாரி ப்ரூக் 31 ரன்னில் ஹர்சித் ராணா பந்தில் கேட்ச் ஆனார். இதனால் இங்கிலாந்து 168/3 என்ற நிலைக்கு வந்தபோது, கேப்டன் ஜோஸ் படலரும், ஜோ ரூட்டும் இணைந்து நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்கள். 

ஸ்கோர் 219 ஆக உயர்ந்தபோது ஜோஸ் பட்லர் (34 ரன்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் தேவையில்லாத ஷாட் அடித்து கேட்ச் ஆனார். மறுமுனையில் நேர்த்தியாக விளையாடிய ஜோ ரூட் ஓடிஐயில் தனது 39வது அரை சதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து ஜோ ரூட் (69 ரன்), ஓவர்டன் (6), அஸ்கிட்ஸன் (3) என அடுத்தடுத்து விக்கெட் வீழந்ததால் இங்கிலாந்தின் ரன் வேகம் தளர்ந்தது.

கடைசி கட்டத்தில் வேகமாக மட்டையை சுழற்றிய லியோம் லிவிங்ஸ்டன் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 32 பந்தில் 41 ரன்கள் எடுத்து அணி 300 ரன்களை கடக்க வைத்தார். முகமது ஷமி ஓவரில் 3 பவுண்டரி விளாசிய அடில் ரஷித் (5 பந்தில் 14 ரன்) கணிசமான பங்களிப்பு அளித்தார். கடைசி விக்கெட்டுக்கு மார்க் வுட் (0) ரன் அவுட் ஆனதால் இங்கிலந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 10 ஓவர்களில் 35 ரன் கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். 

முதல் போட்டியில் ஆடிய வருண் சக்கரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஹர்சித் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த பிட்ச்சில் 305 ரன்கள் என்பது எட்டக்குட்டிய இலக்கு தான். ஆனாலும் 2வது பேட்டிங் என்பதால் இந்திய அணிக்கு பிரஷர் இருக்கும். இந்த சவாலான இலக்கை நோக்கி இந்தியா பேட்டிங் செய்கிறது.