இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

கடந்த 2014ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து சென்றபோது, அந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி சோபிக்கவில்லை. அந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை கோலி. 2007ம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதும் இல்லை. எனவே இங்கிலாந்தில் தனிப்பட்ட முறையில் ஒரு வீரராக தானும் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த கோலி, அணிக்கு தொடரை வென்று கொடுக்கும் முனைப்பிலும் இருந்தார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் ஆட்டம் போட்டி முடிவை தீர்மானிப்பதாக இருக்கும் என ஏற்கனவே பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதற்கு ஏற்றாற்போலவே இங்கிலாந்தில் சிறப்பாக ஆடிவருகிறார் கோலி. இதுவரை ஆடியுள்ள 6 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள். அதிலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் போட்டிருப்பார். முதல் இன்னிங்ஸில் மூன்று ரன்களில் சதத்தை தவறவிட்டதால் அந்த வாய்ப்பை இழந்தார். 

மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ரஹானே-கோலி ஜோடியின் ஆட்டமும், இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா-கோலி ஜோடியின் ஆட்டமும் மிகவும் முக்கியமானது. இந்த தொடரில் கோலி ஜொலித்துவருகிறார். இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். 

இந்நிலையில், மூன்றாவது போட்டி முடிந்ததும் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், விராட் கோலி குறித்து பேசினார். அப்போது, விராட் கோலியை அவுட்டாக்குவதற்கான வழிகளை எப்போதுமே ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறோம். அவரால் எங்களுக்கு எதிராக விரைவாக ரன்களை குவிக்க முடியவில்லை. அப்படியென்றால் நாங்கள் அவருக்கு நன்றாக பந்துவீசுகிறோம் என்றுதான் அர்த்தம். எனினும் அவர் ரன்களை எடுப்பதற்கான வழிகளை கண்டறிந்து சூழலை புரிந்துகொண்டு உள்வாங்கி ஆடுகிறார் என ஜோ ரூட் தெரிவித்தார். 

விராட் கோலி இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ரன்களை குவித்துவருகிறார். எனினும் விராட் கோலியை வேகமாக ரன் எடுக்கவில்லை என்றுகூறி மனதை தேற்றிக்கொள்கின்றனர் இங்கிலாந்து வீரர்கள்.