இங்கிலாந்து அணியின் நலனைக் கருத்தில் கொண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலாஸ்டர் குக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2012-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற குக், இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். 32 வயதான குக், தனது ராஜிநாமா கடிதத்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் காலின் கிரேவ்ஸிடம் அளித்தார்.

இது தொடர்பாக குக் வெளியிட்டுள்ள அறிக்கை:

“இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்ததும், கடந்த 5 ஆண்டுகளாக அணியை தலைமையேற்று வழிநடத்தியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் ஆகும்.

கேப்டன் பதவியிலிருந்து விலகுவது என்பது நம்பமுடியாத மிகக் கடினமான முடிவுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது சரியான முடிவு. இது இங்கிலாந்து அணியின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சரியான முடிவாகும்.

தனிப்பட்ட முறையில் பல வழிகளில் இது எனக்கு சோகமான நாள்தான். இந்த நேரத்தில் நான் கேப்டனாக இருந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள், அலுவலர்கள், இங்கிலாந்து ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருப்பது மிகப்பெரிய சிறப்பாகும். கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும், ஒரு வீரராக தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நம்புகிறேன்.

இங்கிலாந்து அணிக்கும், புதிய கேப்டனுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு உதவுவேன் எனத் தெரிவித்தார்.

அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர், டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த இங்கிலாந்து வீரர் ஆகிய சாதனைகள் குக் வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.