இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்து அசாதாரண வெற்றிக் கண்டது.
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது இந்தியா.
முன்னதாக 1992-93-இல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. அதை இப்போது கோலி படை முறியடித்துள்ளது.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 270 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்பதால், போட்டியை டிரா செய்யும் முனைப்பில் ஆடிய அந்த அணியில் கேப்டன் குக்-ஜென்னிங்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39.4 ஓவர்களில் 103 சேர்த்தது.
இதன்பிறகு ரவீந்திர ஜடேஜாவின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி, அடுத்த 104 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்ககளில் சுருண்டது.
சென்னையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 157.2 ஓவர்களில் 477 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 146, ஜோ ரூட் 88 ஓட்டங்கள் குவித்தனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கருண் நாயர் ஆட்டமிழக்காமல் 303, கே.எல்.ராகுல் 199, பார்த்திவ் படேல் 71 ரன்கள் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், லியாம் டாசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
கடைசி நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் குக்கும், ஜென்னிங்ஸும் போட்டியை டிரா செய்யும் நோக்கில் தடுப்பாட்டம் ஆடினர். குக் 4 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் கோட்டைவிட்டார். இதன்பிறகு குக்கும், ஜென்னிங்ஸும் எச்சரிக்கையாக ஆட, 24-ஆவது ஓவரில் 50 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து.
குக்-ஜென்னிங்ஸ் ஜோடி தொடர்ந்து தடுப்பாட்டத்தில் தீவிரம் காட்ட, மதிய உணவு இடைவேளையின்போது 37 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 97 ஓட்டங்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. இதனால் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அபாரமாக பந்துவீசிய ஜடேஜா, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
ஜடேஜா வீசிய 40-ஆவது ஓவரில் ராகுலிடம் கேட்ச் ஆனார் குக். அவர் 134 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்தார். இதன்பிறகு ஜோ ரூட் களமிறங்க, மற்றொரு தொடக்க வீரரான ஜென்னிங்ஸை வீழ்த்தினார் ஜடேஜா. ஜென்னிங்ஸ் 121 பந்துகளில் 54 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து ரூட் 6 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சிலேயே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மொயீன் அலியுடன் இணைந்தார் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடியும் நிலைக்கவில்லை. பேர்ஸ்டோவ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா வீசிய பந்தை ஸ்கொயர் லெக் திசையில் தூக்கியடித்தார். அப்போது மிட் விக்கெட்டில் நின்ற ஜடேஜா, மின்னல் வேகத்தில் பந்தை துரத்திச் சென்று கேட்ச் பிடிக்க, 4-ஆவது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து.
இதன்பிறகு மொயீன் அலியுடன் ஜோடி சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணியை தோல்வியிலிருந்து மீட்கப் போராடிய இந்த ஜோடி 63 ஓட்டங்கள் சேர்த்தது. வேகமாக ரன் சேர்க்க முயன்ற மொயீன் அலி, ஜடேஜா வீசிய 72-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தை கிரீஸை விட்டு வெளியில் வந்து தூக்கியடித்தார். ஆனால் அது மிட் ஆனில் நின்ற அஸ்வின் கையில் தஞ்சம்புகுந்தது. மொயீன் அலி 97 புந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து ஸ்டோக்ஸ் 23 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் நாயரிடம் கேட்ச் கொடுக்க, இந்தியா வெற்றியை நெருங்கியது. பின்னர் வந்த லியாம் டாசன் 0, ஆதில் ரஷித் 2, ஸ்டூவர்ட் பிராட் 1, ஜேக் பால் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, 88 ஓவர்களில் 207 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. அந்த அணி கடைசி 15 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியத் தரப்பில் ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 10 விக்கெட்டுகளை சாய்த்தார் ஜடேஜா.
இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 15-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது.
