இங்கிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், ஷிவம் துபேக்கு பதிலாக மாற்று வீரராக ஹர்ஷித் ராணா களமிறங்கியதற்கு இங்கிலாந்து அணி அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்தியா வெற்றி
இந்தியா இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்தியாவும், 3வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இந்தியா இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்தை வீழ்த்தி, தொடரை வென்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழந்து 181 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா (30 பந்தில் 53 ரன்கள்), ஷிவம் துபே (34 பந்தில் 53 ரன்கள்) ஆகியோர் சூப்பர் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்பு ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆலவுட்டாகி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஹர்ஷித் ராணாவுக்கு இங்கிலாந்து எதிர்ப்பு
இந்த போட்டியில் முதலில் பிளேயிங் லெவனில் இல்லாத இந்திய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா எதிர்பாராத விதமாக அறிமுகமாகி, அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதாவது அவர் லியோம் லிவிங்ஸ்டன் (9 ரன்), ஜேகப்ப பெத்தெல் (6 ரன்), ஓவர்டன் (19 ரன்) ஆகிய 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்த போட்டியின் மூலம் ஓடிஐயில் அறிமுகமனா ஹர்ஷித் ராணா முதலில் பிளேயிங் லெவனில் இல்லை. ஆனால் ஓவர்டான் வீசிய பந்து ஷிவம் துபேவின் ஹெல்மெட்டில் தாக்கியதால் அவருக்கு லேசான தலைசுற்றல் இருந்தது. இதனால் அவ்ரால் இந்தியா பீல்டிங்கின்போது விளையாட முடியாததால் அதற்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்கி இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். ஆனால் ஹர்ஷித் ராணா களமிறங்கியதற்கு இங்கிலாந்து அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐசிசி ரூல்ஸ் என்ன?
ஏனெனில் ஐசிசி விதிகளின்படி ஒரு வீரர் போட்டியின்போது காயம் அடைந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக அதே சரிசமம் உடைய மாற்று வீரரைத் தான் களமிறக்க வேண்டும். உதாரணத்துக்கு ஷிவம் துபே பேட்டிங் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர். இதனால் அவர் விளையாட முடியாமல் போனதால் அவரை போல் பேட்டிங் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளரத்தை தான் இந்திய அணி மாற்று வீரராக களமிறக்கி இருக்க வேண்டும். ஆனால் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசும் பாஸ்ட் பவுலரான ஹர்ஷித் ராணாவை இந்திய அணி களமிறக்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் தான் இங்கிலாந்து அணியும், அந்நாட்டு ரசிகர்களும் ஹர்ஷித் ராணாவை இந்தியா களமிறக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆட்டத்திற்கு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், ''ஷிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா வருவதாக சொன்னார்கள். ஆனால் நாங்கள் அந்த முடிவை ஏற்கவில்லை. ஏனெனில் ஷிவம் துபே மிதமான வேகத்தில் பந்துவீசுபவர். ஹர்ஷித் ராணா அப்படி இல்லை.
இங்கிலாந்து கேப்டன் கருத்து
ஆகவே ஷிவம் துபேவுக்கு மாற்று வீரராக நாங்கள் ஹர்ஷித் ராணாவை உடன்படவில்லை. போட்டி நடுவர் இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் கூறினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மேட்ச் ரெப்ரி ஜவகல் ஸ்ரீநாத்திடம சில கேள்விகளை கேட்போம். ஆனால் நாங்கள் போட்டியை வெல்லாததற்கு இது முழு காரணமும் இல்லை. ஆட்டத்தை வெல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன. நாங்கள் அதை சரியாக செய்யவில்லை. ஆனாலும் மாற்று வீரர் குறித்து இன்னும் கொஞ்சம் தெளிவு பெற விரும்புகிறேன்'' என்றார்.
இந்திய அணி மாற்று வீரராக ஹர்ஷித் ராணாவை களமிறக்கியதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''இந்திய அணி ஹர்ஷித் ராணாவை மாற்று வீரராக களமிறக்கியது தவறு. ஐசிசி விதியை மீறி இந்தியா மோசடி செய்து வெற்றி பெற்று விட்டது. போட்டி நேர்மையாக நடந்திருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்று இருக்கும்'' என இங்கிலாந்து ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் பொங்கி வருகின்றனர்.
