England defeated West Indies by 7 wickets in an unassailable victory in England ...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிக் கண்டது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டம் மழை காரணமாக 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 30.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் சேர்த்து வெற்றிக் கண்டது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 97 பந்துகளில் 100 ஓட்டங்கள் குவித்தார். ஜோ ரூட் 54 ஓட்டங்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் வில்லியம்ஸ் 2 விக்கெட் எடுத்தார்.
பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் ஐந்து ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது இங்கிலாந்து.
இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் நாட்டிங்காமில் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 5-0 அல்லது 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே, 2019 உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெற முடியும் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் இருந்தது.
ஆனால், முதல் ஆட்டத்திலேயே தோற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது மேற்கிந்தியத் தீவுகள்.
1975, 1979 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது மேற்கிந்தியத் தீவுகள்.
அப்படிப்பட்ட அணி முதன்முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. இது அந்நாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்த ஏமாற்றம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மறக்கமுடியாத ஒரு அடியாக இருக்கும்.
