இந்தியாவுக்கு எதிரான முதல் ஓடிஐயில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்சித் ராணா ஆகியோர் ஓடிஐ கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக களமிறங்கினார்கள். ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். இதேபோல் முகமது ஷமியும் நீண்ட காலத்திற்கு பிறகு ஓடிஐ அணியில் களமிறங்கினார்.
மேலும் குல்தீப் யாதவ்வும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் களம் கண்டார். காயம் காரணமாக விராட் கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய பென் டக்கெட்டும், பில் சால்ட்டும் இந்திய பாஸ்ட் பவுலர்களின் பந்துவீச்சை விளாசித்தள்ளினார்கள். பில் சால்ட் அதிரடியக சில சிக்சர்களை பறக்க விட்டார். ஸ்கோர் 8.5 ஓவர்களில் 75 ரன்களாக இருந்தபோது பில் சால்ட் (26 பந்தில் 41 ரன்) ரன் அவுட் ஆனார்.
ஹர்சித் ராணா கலக்கல்
இதன்பிறகு ஹர்சித் ராணாவின் ஓவரில் பென் டக்கெட் (32 ரன்), ஹாரி ப்ரூக் (0) அடுத்தடுத்து அவுட் ஆக இங்கிலாந்து அணி 77க்கு 3 விக்கெட் இழந்தது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஜோ ரூட், ஜோஸ் படலர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஸ்கோர் 111 ஆக இருந்தபோது ரூட் (19 ரன்) ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் பட்லருடன் சேர்ந்த ஜேக்கப் பெத்தல் சூப்பராக விளையாடினார்.
பின்பு சூப்பர் அரைசதம் (67 பந்தில் 52 ரன்) விளாசிய பட்லர் அக்சர் படேல் பந்தில் பாண்ட்யாவிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய லிவிங்ஸ்டன் (5) வந்த வேகத்திலேயே ஹர்ஷித் ராணா பந்தில் வெளியேறினார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய ஜேக்கப் பெத்தல் அரைசதம் (51 ரன்) அடித்த உடன் ஜடேஜா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து ஆல் அவுட்
அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் இங்கிலாந்து அணியின் ரன்வேகம் குறைந்தது. இறுதிக்கட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் (18 பந்தில் 21 ரன்) அதிரடி காட்டி அவுட்டானார. இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஹர்சித் ராணாவின் 7 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அறிமுக போட்டியிலேயே இவர் அசத்தியுள்ளார்.
கட்டுக்கோப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 9 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஓடிஐ விளையாடும் முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். அக்சர் படேலும் 1 விக்கெட் எடுத்தார். 249 என்ற எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது.
