இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் பந்துவீசிய விதத்தை விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் ஸ்பின் பவுலர் ஈஏஎஸ் பிரசன்னா.

இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை 3-1 என இழந்தது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின், முதல் போட்டியில் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் திணறிவருகிறார். 

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதன்பிறகு மூன்று போட்டிகளில் சேர்த்தே 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். முதல் போட்டி முடிந்த பிறகு இயன் வார்டிடம் தனது பவுலிங் உத்தி குறித்து அஷ்வின் விளக்கினார். அதை பார்த்து இங்கிலாந்து அணி வீரர்கள் அஷ்வினை எதிர்கொள்ள திட்டம் வகுத்திருக்கக்கூடும்.

எனினும் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்த சவுத்தாம்ப்டனில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஷ்வினால் சோபிக்க முடியாமல் போனது. முதல் போட்டியில் அஷ்வினின் பவுலிங்கில் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அதன்பிறகு மிகவும் தெளிவாக நிதானமாக அஷ்வினின் பந்தை எதிர்கொண்டு ஆடினர். ஸ்பின்னிற்கு சாதகமான சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் அவரது பந்தை விட்டு பேக்ஃபூட் ஆடினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இந்த போட்டியில் அஷ்வின் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். ஒருவேளை அஷ்வின் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

அஷ்வினால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்பின்னரான மொயின் அலி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

இதுதொடர்பாக மை நேஷன் ஆங்கில இணையதளத்திற்கு இந்திய அணியின் முன்னாள் ஸிபின் பவுலர் ஈஏஎஸ் பிரசன்னா பேட்டியளித்துள்ளார். அப்போது அஷ்வினின் பவுலிங் குறித்து கருத்து தெரிவித்த பிரசன்னா, சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் அஷ்வின் ஃபீல்டிங் செட்டப்பை மாற்றியிருக்க வேண்டும். சில அடிப்படையான விஷயங்களை கவனத்தில் கொள்ள அஷ்வின் தவறிவிட்டார். ஷாட் பிட்ச் பந்துகளை வீசாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை டிரைவ் ஆட வைத்திருக்க வேண்டும். ஆனால் அஷ்வின் ஷாட் பிட்ச் பந்துகளாக வீசியதால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் பேக்ஃபூட் ஆடிவிட்டனர்.

ஆடுகளத்தில் இருந்த ரஃப் பேட்ச்சஸில்(ஆடுகளம் ஃபிளாட்டாக இல்லாத இடம்) பந்துகளை பிட்ச் செய்து வீசியிருக்க வேண்டும். மொயின் அலி அப்படித்தான் வீசினார். ஷாட் பிட்ச் பந்துகளை வீசாமல் பேட்ஸ்மேன்களை ஃப்ரண்ட் ஃபூட் ஆட வைத்திருந்தால் விக்கெட்டுகள் கிடைத்திருக்கும். மொயின் அலியின் பந்தில் கோலி ஃப்ரண்ட் ஃபூட் ஆடித்தான் அவுட்டானார். அதுபோல பேட்ஸ்மேன்களை டிரைவ் ஆட வைத்து அவுட்டாக்கியிருக்க வேண்டும். அதை செய்ய அஷ்வின் தவறிவிட்டார் என பிரசன்னா விமர்சித்துள்ளார்.