கரீபியன் பிரீமியர் லீக் தொடரை டுவைன் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக வென்று அசத்தியுள்ளது. 

இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்படுவதை போல், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசன் கடந்த மாதம் 8ம் தேதி தொடங்கி ஒரு மாதத்தும் மேலாக நடந்துவந்தது. இந்த தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லா வாஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ், பார்படோஸ் டிரிடென்ட்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.

லீக் மற்றும் பிளே-ஆப் சுற்றுகள் முடிவில் கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி டிரினாடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் டுவைன் பிராவோ, பந்துவீச்சை தேர்வு செய்ததால் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் லூக் ராஞ்சி மட்டுமே 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்கள் எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. 

148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் ராம்டின் - பிரண்டன் மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தது. ராம்டின் 24 ரன்களிலும் மெக்கல்லம் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கோலின் முன்ரோ, 68 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக கரீபியன் பிரீமியர் லீக் தொடரை வென்றது.