Due to the use of doping nine countries banned a year to participate in international tournaments ...
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் ஒன்பது நாடுகளுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச பளு தூக்குதல் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் (ஐடபிள்யுஎஃப்).
கடந்த 2008 மற்றும் 2012-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ரஷியா, சீனா உள்ளிட்ட ஒன்பது நாட்டு வீரர் / வீராங்கனைகளை மறுபரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ரஷியா, சீனா, ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், மால்டோவா, கஜகஸ்தான், துருக்கி, உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் வரும் நவம்பர் 28 முதல் நடைபெற இருக்கும் பளுதூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளன.
இந்த ஓராண்டு தடை காரணமாக சீன பளுதூக்குதல் வீரர்கள் 2018-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் இழக்கின்றனர்.
இதுகுறித்து ஐடபிள்யுஎஃப் தலைவர் டமாஸ் அஜான், "பளுதூக்குதல் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தாமல் இருப்பதை அந்தந்த நாட்டு சங்கங்கள் உறுதிப்படுத்தாத பட்சத்தில், போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை அவை இழக்கும்.
எனினும், ஊக்கமருந்து கலாச்சாரத்தில் இருந்து அவை வெளிவரும் பட்சத்தில், அவற்றிற்கான எங்களது ஆதரவு தொடரும்' என்றுத் தெரிவித்தார்.
