டபிள்யூடிஏ பைனல்ஸ் என்றழைக்கப்படும் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டொமினிகா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை தோற்கடித்தார்.
இந்தப் போட்டியின் குரூப் சுற்றில் கெர்பரிடம் தோற்ற டொமினிகா, இறுதிச்சுற்றில் கெர்பரை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.
வெற்றி குறித்துப் பேசிய டொமினிகா, "இது எனக்கு மிக முக்கியமான தருணம். எனது டென்னிஸ் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம் இது. எனக்குள் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். இந்த ஆண்டில் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு என்னை தூண்டிய கெர்பருக்கு வாழ்த்துகள். கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்கலாம்' என்றார்.
இரட்டையர் பிரிவு: மகளிர் இரட்டையர் பிரிவில் ரஷியாவின் எக்டெரினா மகரோவா-எலினா வெஸ்னினா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த ஜோடி தங்களின் இறுதிச்சுற்றில் 7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெத்தானி மடேக் சேன்ட்ஸ்-செக்.குடியரசின் லூஸி சஃபரோவா ஜோடியைத் தோற்கடித்தது.
