Asianet News TamilAsianet News Tamil

எங்கள் அணி நிர்வாகம் செய்த வேலை இருக்கே..! கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடி

dinesh karthik spoken about defeat csk
dinesh karthik spoken about defeat csk
Author
First Published May 4, 2018, 3:36 PM IST


19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி வீரர்களை அதிகளவில் ஏலத்தில் எடுத்த எங்கள் அணியின் நிர்வாகத்துக்கே அனைத்து பெருமையும் சேரும் என கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதன்பிறகு ஷுப்மன் கில்லின் பொறுப்பான ஆட்டம் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால், 17.4 ஓவருக்கே இலக்கை எட்டி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இருந்து அதிகமான இளம் வீரர்களை எங்கள் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த வெற்றிகளின் பெருமையெல்லாம் இளம் வீரர்களை எடுத்த எங்கள் அணி நிர்வாகத்தையே சேரும். உண்மையாகவே இளம் வீரர்கள் அபார திறமை வாய்ந்தவர்கள். ஷுப்மன் கில்லும் சிறந்த வீரர். அவரை பெரிதாக புகழ்ந்து அவர் மீதான அழுத்தத்தை அதிகரிக்க விரும்பவில்லை. எங்கள் அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். சுனில் நரைன் ஒரு முழுமையான ஆல்ரவுண்டர். அவரை எங்கள் அணியில் பெற்றிருப்பது சிறப்பானது என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios