திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு தினேஷ் கார்த்திக்கிற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

தியோதர் டிராபி தொடரின் முதல் போட்டி இந்தியா ஏ மற்றும் இந்தியா பி ஆகிய அணிகளுக்கு இடையே டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு, தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை மட்டும் சரியாக பயன்படுத்திக்கொண்டால் மீண்டும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு நிதாஹஸ் டிராபியில் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக்கிற்கு, மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததால் எஞ்சிய மூன்று போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். ஆசிய கோப்பை தொடரில் ஒருநாள் அணியிலும் ஆட வாய்ப்பு பெற்ற தினேஷ் கார்த்திக், அந்த வாய்ப்பை பெரியளவில் பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். 

இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நிலவும் நிலையில், அதற்கான தீர்வாக அம்பாதி ராயுடுவும், ரிஷப் பண்ட்டும் பார்க்கப்படுகின்றனர். எனினும் தினேஷ் கார்த்திக்கிற்கான கதவு இன்னும் திறந்தே உள்ளன. இந்நிலையில், அவரது திறமையை நிரூபித்து மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க தியோதர் டிராபி தொடரில் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி டெல்லியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா பி அணி, ஹனுமா விஹாரியின் அருமையான பேட்டிங்கால்(87 ரன்கள்) 261 ரன்களை எடுத்துள்ளது. 

262 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் பிரித்வி ஷா மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரும் மூன்றாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா 7 ரன்களிலும் கருண் நாயர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 

இதையடுத்து அன்மோல்பிரீத் சிங்குடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்துள்ளார். தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி, இந்த போட்டியில் அணியை வெற்றி பெற வைத்து அவரது திறமையை நிரூபித்தால் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார். பெரிய இன்னிங்ஸை ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. பயன்படுத்துவாரா என்று பார்ப்போம்.