தமிழ்நாட்டுக்கு ரஞ்சி டிராபியை வென்று கொடுக்கும் வரை முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற மாட்டேன் என்று தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 2004ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் அறிமுகமானார். ஆனால் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை. தோனியின் வருகையால் அவர் இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடித்துவிட்டதால் தினேஷ் கார்த்திக் அவ்வப்போது அணியில் சேர்க்கப்பட்டும் நீக்கப்பட்டும் வந்தாரே தவிர நிரந்தர இடம் பிடிக்கவில்லை.

தற்போதைய சூழலில் டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார் தினேஷ் கார்த்திக். கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி தொடரில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய அணியை திரில் வெற்றி பெறவைத்த தினேஷ் கார்த்திக், பல போட்டிகளில் வெற்றி நாயகனாக திகழ்ந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அண்மையில் நடந்த டி20 தொடரிலும் கூட சிறப்பாக ஆடினார் தினேஷ் கார்த்திக். எனவே டி20 அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கான இடம் உறுதி செய்யப்பட்டு விட்டாலும் கூட ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இனிமேல் நிரந்தர இடம் கிடைப்பது கடினமே.

ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் ஒருநாள் அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக், அந்த வாய்ப்பை பெரியளவில் பயன்படுத்தி கொள்ளவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இருந்த சிக்கலை பயன்படுத்திக்கொண்டு 4ம் வரிசை வீரருக்கான இடத்தை அம்பாதி ராயுடு பிடித்துவிட்டார். 

எனவே ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தும் விதமாக முதல் தர கிரிக்கெட்டிலிருந்து அண்மையில் ஓய்வு அறிவித்தார் ராயுடு. தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணியில் தனக்கான இடத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். எனவே அதற்காக ராயுடுவை போலவே முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் ஐடியா எதுவும் இருக்கிறதா என்று தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை பற்றி நான் யோசிக்கவே இல்லை. தமிழ்நாட்டுக்காக ஆடுவதற்காக நான் மகிழ்ச்சி கொள்கிறேன். மாநில அணிக்காக ஆடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தமிழ்நாட்டு அணியில் ஆடுவதை எப்போது அணி நிர்வாகம் பாரமாக கருதுகிறதோ, அந்த நொடி நான் ஓய்வு பெற்றுவிடுவேன். ஆனால் அதுவரை என்னால் எவ்வளவு காலம் ஆடமுடியுமோ அதுவரை தமிழ்நாட்டு அணியில் ஆடுவேன். ரஞ்சி டிராபியை தமிழ்நாட்டுக்கு வென்று கொடுக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறும் வரை ஆடுவேன் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.