ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. சூதாட்டப் புகார் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை அணி, இந்தமுறையும் தோனியின் தலைமையின் கீழ் களம் காண்கிறது. அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்த முறை களமிறங்குகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் அணிகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னை அணிக்காக ஆடிவந்த அஸ்வினை அந்த அணி தக்கவைத்து கொள்ளததால், அவரை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் அணி, அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளது. அதனால் இதுவரை ஐபிஎல்லில் தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாடிவந்த அஸ்வின், தோனியையே எதிர்த்து விளையாட உள்ளார்.

அதேபோல், கொல்கத்தா அணிக்கு இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த கவுதம் காம்பீரை கொல்கத்தா அணி தக்க வைக்காததால், அவரை டெல்லி அணி எடுத்துள்ளது. ஆனால் கொல்கத்தா அணி, 7.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்துள்ளது. அந்த அணியில் உள்ள மற்றொரு அதிரடி வீரரான ராபின் உத்தப்பாவை துணை கேப்டனாக நியமித்துள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தினேஷ் கார்த்திக், கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதை கௌரவமாக கருதுகிறேன். எதையும் சொல்வதை காட்டிலும் செயல்பாட்டில் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

அந்தவகையில் கேப்டனாக கோலியின் ஸ்டைலை பின்பற்ற இருக்கிறேன். கோலி ஆக்ரோஷமான வீரர் மற்றும் கேப்டன். ஆக்ரோஷம் எனது இயல்பு கிடையாது. அதற்காக எனக்குள் ஆக்ரோஷம் இல்லை என நினைக்க வேண்டாம் என தெரிவித்தார்.

அணியில் குல்தீப் யாதவ், சாவ்லா, சுனில் நரேன் போன்ற சுழற்பந்துவீச்சாளர்களும் இந்திய ஜூனியர் அணியில் இருந்த நாகர்கோடி, ஷிவம் மவி ஆகியோரும் உள்ளனர். அணியில் பேட்டிங், பவுலிங் வீரர்களின் கலவை சரியாகவே உள்ளது என தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.