dhoni worried about csk bowling
கடைசி ஓவர்களை யார் வீசுவது என்பதுதான் எங்கள் அணியின் கவலையாக உள்ளது என தோனி தெரிவித்துள்ளார்.
நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் தோனி தலைமையிலான சென்னை அணி சிறப்பாக ஆடிவருகிறது. 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி, பிராவோ ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் பேட்டிங்கில் சென்னை அணி வலுவாக திகழ்கிறது. ஆனால் பவுலிங்கில் தொடர்ச்சியாக சொதப்பிவந்தது. அதை தோனியே இரண்டு, மூன்று முறை தெரிவித்திருக்கிறார்.
தொடர்ச்சியாக பவுலிங்கில் சொதப்பிவந்த சென்னை அணி பவுலர்கள், பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசினார்கள். கடும் விமர்சனத்துக்கு உள்ளான ஜடேஜா, நேற்று மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சென்னை அணியும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, கடைசி சில போட்டிகளாக எங்கள் அணியின் பவுலிங் தான் வருத்தமளித்தது. அதிலும் குறிப்பாக கடைசி ஓவர்களை யார் வீசுவது என்பது பெரிய கவலையாக உள்ளது. இந்த போட்டியில் ஜடேஜாவும் ஹர்பஜனும் சிறப்பாக பந்துவீசினார். எங்கள் அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருப்பது பெரிய பலம். கடைசி ஓவர்கள் சரியாக வீசப்படாததால் பவுலர்களை மாற்றி மாற்றி களமிறக்கப்படுகின்றனர். பவுலர்களை மாற்றுவதால் அதற்கேற்றபடி டாப் ஆர்டரும் மாற்றப்படுகிறது. அதுதான் அணியில் மாற்றங்கள் செய்யப்படுவதற்கான காரணம் என தோனி தெரிவித்தார்.
