ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்றது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, இந்த தொடரில் ஹாட்ரிக் அரைசதங்கள் அடித்து மீண்டு வந்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், தோனி மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியுடன் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்நிலையில், கடைசி போட்டி முடிந்ததும் தோனியின் கிண்டலான செயல் வைரலாகிவருகிறது. 

மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி பெற செய்த தோனி, போட்டி முடிந்ததும் பந்தை கையில் எடுத்து சென்றார். எதிரணி வீரர்கள், சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், அணி நிர்வாகத்தினர் ஆகியோருடன் கை குலுக்கிக்கொண்டு வந்தார் தோனி. அப்போது பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்காரிடம், தனது கையில் இருந்த பந்தை கொடுத்த தோனி, பந்தை வாங்கிக்கொள்ளுங்கள்; இல்லையென்றால் நான் ஓய்வு பெறப்போகிறேன் என்று சொல்லிவிடுவார்கள் என்று கிண்டலாக தெரிவித்தார். 

தோனி இப்படி கூறியதற்கு காரணம், ஏற்கனவே நடந்த சம்பவங்கள் தான். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி முடிந்து வெளியேறும்போது தோனி, ஸ்டம்பை எடுத்து கொண்டு சென்றார். அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டி முடிந்து களத்திலிருந்து வெளியேறிய தோனி, அம்பயரிடம் இருந்து பந்தை வாங்கிச்சென்றார். உடனடியாக தோனி ஓய்வு பெறப்போகிறாரா என்ற சந்தேகத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பினர். ஆனால், உலக கோப்பை இங்கிலாந்தில் நடக்க உள்ளதால், அங்கு பந்துகள் எந்தளவிற்கு ஸ்விங் ஆகின்றன என்பதை பந்தின் தன்மையை வைத்து ஆராய்வதற்காக பவுலிங் பயிற்சியாளரிடம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றதாக தோனி விளக்கமளித்தார். மேலும் 50 ஓவர்கள் வீசப்பட்ட பந்து ஐசிசிக்கு தேவையில்லை என்பதால் அந்த பந்தை பவுலிங் பயிற்சியாளரிடம் கொடுப்பதற்காக எடுத்து சென்றதாக தோனி தெரிவித்திருந்தார். 

இங்கிலாந்தில் தோனி பந்தை கையில் எடுத்து சென்றதால் அவர் ஓய்வு பெறப்போவதாக ஒரு வதந்தி பரவியது. அதேபோன்றதொரு வதந்தி மீண்டும் பரவக்கூடும் என்பதால், இந்த முறை பேட்டிங் பயிற்சியாளரிடம் கிண்டலடித்துள்ளார் தோனி.