தோனி தான் சிறந்த கேப்டன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மிபதி பாலாஜி புகழாரம் சூட்டியுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி, வெற்றிகளை குவித்து சாதனைகளை படைத்து வருகிறது. இந்திய அணி சர்வதேச அளவில் சிறந்த அணியாக வலம் வருகிறது.

இந்திய அணியின் இந்த அபரிமிதமான வளர்ச்சி ஒரே நாளில் நடந்தது அல்ல. இதற்கு முன்னதாக கேப்டன்களாக இருந்த கங்குலி, தோனி ஆகியோரின் பங்களிப்புகள் மிக முக்கியமானது. குறிப்பாக தோனியின் பங்களிப்பு அளப்பரியது. மூன்று விதமான சாம்பியன்ஷிப்பையும் இந்தியாவிற்கு வென்று கொடுத்த கேப்டன்.

இந்நிலையில், தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளருமான பாலாஜி கூறியதாவது:

ஒரு அணியை வழிநடத்த தோனியை போல் சிறந்த வீரர் கிடையாது. நிறைய வீரர்களை தோனி உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக நிறைய நல்ல பவுலர்களை உருவாக்கியிருக்கிறார். எந்த பவுலரையும் அவரது ஸ்டைலிலிருந்து மாறி பந்துவீச தோனி வற்புறுத்தமாட்டார். வீரர்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்பார். நெருக்கடியான சூழலில் தடுமாற மாட்டார். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளையும் எடுக்க மாட்டார். எந்த நேரத்தில் யாரை பந்துவீச வைக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர். அவரது கேப்டன்சிப்பில் விளையாடும் போது நிறைய கற்று கொள்ளலாம் என தோனியை பாலாஜி புகழ்ந்து தள்ளியுள்ளார்.