ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்த தோனி, கடைசி போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் 1-1 என தொடர் சமனானது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

231 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்களிலும் தவன் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கோலியும் தோனியும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக ஆடிய கோலி, 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். 

கோலியின் விக்கெட்டுக்கு பிறகு தோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து நிதானத்தை கடைபிடித்த தோனி, இந்த தொடரில் தொடர்ந்து மூன்றாவது அரைசதத்தை அடித்தார். ஹாட்ரிக் அரைசதம் அடித்து களத்தில் இருக்கும் தோனி, இலக்கை விரட்டிவருகிறார். தோனிக்கு ஒத்துழைப்பு கொடுத்து கேதர் ஜாதவ் ஆடிவருகிறார். 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவந்த தோனி, ஆஸ்திரேலிய தொடரில் மீண்டு வந்துள்ளார். முதல் போட்டியில் 51 ரன்கள் அடித்த தோனி, இரண்டாவது போட்டியில் 55 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற செய்தார். மீண்டும் தான் ஒரு பெஸ்ட் ஃபினிஷர் என நிரூபித்த தோனி, இந்த போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார்.