வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடக்கிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்தவுடன் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடக்கிறது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் அடுத்த மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலுமே இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். எல்லா ஜாம்பவான்களுக்குமே கடைசிக்கட்ட கிரிக்கெட் காலம் ஒன்று உண்டு. நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்கள் ஃபார்மில் இருக்கும்போதே ஓய்வு பெறுவது உண்டு. சிலர் எப்போதுதான் ஓய்வுபெறுவார்களோ என்று அனைவரையும் ஏங்கவிட்டு, கடைசியாக ஓரங்கட்டப்படுவது மற்றொரு ரகம். 

எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாலும் சரியான நேரத்தில் ஓய்வு பெறவில்லை என்றால் இதுதான் நியதி. இந்திய அணிக்கு மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்து, இந்திய கிரிக்கெட்டிற்கு பெரும் பங்காற்றியுள்ள தோனியை மெதுவாக ஓரங்கட்டும் நேரம் வந்துவிட்டது. 

தோனி அண்மைக்காலமாக சரியான ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். ரன்கள் எடுக்க முடியாமல் திணறுகிறார். எனவே அவரது ஃபார்மையும் வயதையும் சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்கள், அவர் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்கின்றனர். எனினும் தோனியின் அனுபவம் மற்றும் விக்கெட் கீப்பிங்  ஆகியவை அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் பயன்படும் என்பதால் அதுவரை அவர் ஆடுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன்பிறகு இந்திய அணியில் அவரது இடத்தை பூர்த்தி செய்யும் வீரருக்கு இப்போதிலிருந்தே அவ்வப்போது வாய்ப்பு வழங்கவேண்டியது அவசியம். அதைத்தான் அணி நிர்வாகம் செய்துவருகிறது. 

முதலில் டி20 போட்டிகளிலிருந்து ஓரங்கட்டப்படுகிறார். அதன் முன்னோட்டமாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.