களத்தில் எதிரணி வீரர்களை சீண்டுவதும் மோதுவதும் விளையாட்டில் இயல்புதான். அது கிரிக்கெட்டிலும் நடக்கும். எதிரணி வீரர்களை சீண்டி, வம்புக்கு இழுத்து, கிண்டலடித்து அவர்களை மனரீதியாக அழுத்தம் கொடுப்பது, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கைவந்த கலை. 

ஒவ்வொரு அணியிலும் ஒரு வீரரோ அல்லது சில வீரர்களோ அப்படியிருப்பார்கள். பொதுவாக இந்திய வீரர்கள் வம்புக்கு போகமாட்டார்கள்; ஆனால் வந்த வம்பை விடமாட்டார்கள். இந்திய அணியில் ஒரு சில வீரர்கள் மட்டுமே எதிரணி வீரர்களை எரிச்சலூட்டும் வகையிலான செயல்பாடுகளை செய்துள்ளனர். அதிலும் தற்போது அந்த மாதிரி வீரர்கள் இல்லை என்றே கூறலாம். 

இந்தியா இங்கிலாந்து இடையே நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவானும் ராகுலும் ஆடிக்கொண்டிருந்தபோது 12வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். 

அந்த ஓவரின் கடைசி பந்தை ராகுல் அடித்ததை அடுத்து ராகுலும் தவானும் ஒரு ரன் ஓடினர். அப்போது எதிர்முனையில் இருந்து ஓடிய தவானை ஸ்டோக்ஸ் இடித்துக்கொண்டே ஓடினார். தவானுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் ஸ்டோக்ஸ் நடந்துகொண்டார். எனினும் தவான் அந்த ரன்னை வெற்றிகரமாக ஓடிவிட்டார். பின்னர் இருவரும் சிரித்துக்கொண்டனர். அதிலும் தவான் ஒரு படி மேலே போய், ஸ்டோக்ஸிடம் சென்று அவர் தோள் மேல் கைபோட்டு, பின்னர் தட்டி கொடுத்துவிட்டு வந்தார். தவான் எப்போதுமே டென்ஷன் ஆகாத வீரர் என்பதை பலமுறை பார்த்திருக்கலாம். எதிரணி வீரர்கள் எரிச்சலூட்டினாலும் சிரிப்பை உதிர்த்துவிட்டு கடந்துவிடும் பழக்கம் கொண்டவர் தவான். 

ஸ்டோக்ஸ் இடித்தபோதும் அதையே தான் செய்தார் தவான்.